அமேசான் மழைக் காடுகள் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால், இந்த காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிக முறை காட்டு தீ உருவாகியுள்ளது.
இந்தாண்டு அமேசான் மழைக்காடுகளில் 72 ஆயிரத்து 843 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் எண்ணிக்கையை விட 83 சதவீதம் அதிகம் என எண்ணப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை மட்டும் சுமார் 9 ஆயிரத்து 507 முறை புதிய காட்டுத்தீ உருவாகி இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை செய்தி விடுத்துள்ளது. இந்த காட்டுத் தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த இரு வாரங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ உலக அளவில் பெரும் விவாதத்தைக் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இந்த வனங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் பழங்குடியினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் பிரேசில் அதிபரைக் கண்டித்து லண்டனில் உள்ள பிரேசில் தூதரகத்தின் முன்பாக ஹுனி குய்ன் கக்ஸினாவா – (Huni Kuin Kaxinawa) என்ற பழங்குடினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின் போது அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்த போராட்டம் குறித்து ஹுனி குய்ன் பழங்குடியினர் அமைப்பின் தலைவர் கூறுகையில், “கடந்த மூன்று வாரங்களாக அமேசான் காட்டுப்பகுதி எரிந்து வருகிறது. இது எங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை. இதனை நாட்டில் உள்ள பெரும் நிறுவனத்தினர் செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த தீயினால் பல உயிர்கள் இறந்து போயின, பல அரிய வகை மரங்கள் சிதைந்து போனது இதனைப்பார்க்கும் போது வேதனையாக உள்ளது. இந்தக் காடுகளை அழிப்பது தான் அவர்களின் இலக்கு என்றால் கடைசிச் சொட்டு ரத்தம் உள்ளவரை அமேசான் மழைக்காடுகளை அழிக்கவிடமாட்டோம்.
இந்த இயற்கையைப் பாதுகாக்கும் போராட்டத்தில் மற்ற பழங்குடியினரும் கை கோர்க்கவுள்ளனர். இந்த இயற்கை தான் எங்கள் உலகம்; இதனைப் பாதுகாப்பதுதான் எங்களின் இலக்கு.” என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துள்ளனர்.