இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் தளகர்த்தர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியா விடுதலை அடையும் முன்பே, இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவர். அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ரோஸ் தீவில் இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்டவர். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
சுதந்திர இந்தியாவின் மாபெரும் சக்தியாக விளங்கக்கூடியவர் என எதிர்பார்க்கப்பட்ட அவர், கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ம் தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அவர் உடல் எரியூட்டப்பட்டு அதன் சாம்பல் ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், நேதாஜி மரணம் அடையவில்லை என்று அவருடைய சகோதரரும், குடும்பத்தினரும் கூறினார்கள். அவர் தலைமறைவாக இருப்பதற்காகவும், இறந்துவிட்டதாகவும் வெவ்வேறான தகவல்கள் உலா வந்தன.
இதுதொடர்பாக பலமுறை விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும் நேதாஜி விமான விபத்தில் இறந்தாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ரெங்கோஜி கோவிலில் உள்ள சாம்பலை எடுத்து செல்லும்படி இந்தியாவிடம் ஜப்பான் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனாலும், அவரது மரணம் உறுதி செய்யப்படாததால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இது குறித்து நேதாஜியின் மகளான அனிதா போஸ் புதிய யோசனை ஒன்றினைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘ஜப்பானில் உள்ளதாக கூறப்படும் நேதாஜியின் சாம்பலை எடுத்து அதை டி.என்.ஏ. பரிசோதனை செய்யவேண்டும். இது தொடர்பாக இந்திய அரசும், ஜப்பான் அரசும் உரிய முடிவெடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் நேதாஜி மரணத்தின் மர்மம் விலகி விடும்.
நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ பரிசோதனைக்கு விரைவில் உட்படுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கிறேன்’ என கூறியுள்ளார்.
நேதாஜியின் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்தால், அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகி விடுமா? இதனைச் செய்ய இந்தியாவும், ஜப்பானும் முன்வருமா என்பது போகப்போகத் தெரியும்.