கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டு தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
பாரத் தர்ம ஜனசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணியின் அமைப்பாளராகவும் உள்ளார். இவர் 10 வருடத்திற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் பகுதியில் கட்டுமானத் தொழில் செய்து வந்தார். அங்கு தொழில் நஷ்டத்தைத் தொடர்ந்து இந்தியா திரும்பியுள்ளார்.
முன்னதாக துஷார் வெள்ளப்பள்ளிக்கு தொழிலில் உதவுவதற்கு நாஸில் அப்துல்லா என்பவர் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் இந்தியா வந்தபிறகு அந்தப் பணத்தை ஒப்படைக்கும்படி அப்துல்லா கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்குக் கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது.
இதனையடுத்து இதுகுறித்துப் பேசலாம் என அப்துல்லா அழைத்துள்ளார். பின்னர் துஷார் வெள்ளப்பள்ளி அஜ்மானுக்கு புறப்பட்டுச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சு வார்த்தையில் விவகாரம் முற்றிய நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் நாஸில் புகார் கொடுத்துள்ளார். அவர் புகாரின் அடிப்படையில் துஷார் வெள்ளப்பள்ளியை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாற்றுக்கட்சி தலைவர் என்றாலும் அவருக்கு உதவ கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வந்துள்ளார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட வரம்பிற்கு உட்பட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும்” எனவும் கோரிக்கை வைத்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த நடவடிக்கை பாரத் தர்ம ஜனசேனா கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.