உலகம்

50 ஆண்டுகளுக்குப் பிறகு கையில் கிடைத்த கடிதம் : பாட்டிலை எடுத்தவருக்குக் காத்திருந்த ஆச்சர்யம் !

ரஷ்ய கேப்டன் ஒருவரின் 50 வருடத்திற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று அமெரிக்காவின் கடற்கரையில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு கையில் கிடைத்த கடிதம் : பாட்டிலை எடுத்தவருக்குக் காத்திருந்த ஆச்சர்யம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் கடந்தவாரம் அலாஸ்கா பகுதியில் உள்ள கடற்கரைக்கு ஓய்வுக்காகச் சென்றுள்ளார். அப்போது விறகு எடுப்பதற்கு அருகில் உள்ள புதர்களுக்கு சென்று தேடியுள்ளார்.

அங்கு மண்ணில் பாதி புதைந்த நிலையில் ஒரு பாட்டில் இருந்துள்ளது. அதனை எடுக்கும் போது அதில் ஒரு துண்டு சீட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அதில் என்ன இருக்கிறது என்று எடுத்து பார்த்துள்ளார் இவனோப்.

ஆனால் அதில் ரஷ்ய மொழியில் எழுத்துக்கள் இருந்துள்ளது. இதனையொட்டி அதில் என்ன உள்ளது என தெரிந்துக்கொள்வதற்கு புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, “இதில் என்ன உள்ளது என, ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் படித்துச் சொல்லுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து கடிதத்தில் என்ன உள்ளது என்பதனை ஒருவர் மொழிபெயர்த்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இந்த கடிதத்தைக் கண்டுபிடித்த உங்களுக்கு வாழ்த்துகள். ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இதைக் கண்டுபிடிப்பவர்கள் “43, வி.ஆர்.எக்ஸ்.எப் சுலாக் விலாதி வோஸ்தோக்” என்கித்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் கேப்டன் அனடோலி போட்சனேகோ என்றும் ஜூன் 20, 1969 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 50 வருடத்திற்கும் முன்பு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த ரஷ்ய செய்தி நிறுவனம் கடிதம் எழுதிய கேப்டன் அனடோலி போட்சனேகோவை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியது. ஒருவழியாக மிகப்பெரிய தேடலுக்குப் பிறகு அவரை கண்டுபிடித்து பேட்டி எடுத்துள்ளனர்.

அப்போது அவர் கூறியதாவது, “இந்த கடிதத்தை நான் தான் எழுதினேன். என்னுடைய 35வது வயதில் விளையாட்டாக செய்தேன். இது இந்த அளவிற்கு போகும் என எதிர்பார்க்க வில்லை. மிகவும் சந்தோசமாக உள்ளது. இதனைக் கண்டுபிடித்தவருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories