காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தான் அரசு, இந்தியாவுடனான உறவுகளை முறிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று, இந்தியா உடனான வர்த்தக உறவை முறித்துக்கொள்வதாகவும், இந்தியா பாகிஸ்தான் இடையேயான வான்வழி போக்குவரத்தை ரத்து செய்வதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைத்துக்கொள்ள உள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது.
மேலும், லாகூர் - அட்டாரி வரை இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் ரத்து செய்து உத்தரவிட்ட பாகிஸ்தான் அரசு தற்போது பாகிஸ்தானின் கராச்சி முதல் ராஜஸ்தானின் ஜோத்பூர் வரையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயிலையும் இயக்க மறுத்துள்ளது.
ஆகஸ்ட் 9ம் தேதி நள்ளிரவு முதல் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நான் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை இயக்கப்படாது என அந்நாட்டு ரயில்வேதுறை அமைச்சர் ஷேக் ராஷித் அகமது பேசியுள்ளார்.
மேலும், “இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லையான ஜீரோ பாயிண்ட் பகுதியில் இந்திய பயணிகளை சரியாக இரவு 11.55 மணிக்கு இறக்கிவிட்டு திருப்பி அனுப்ப உள்ளோம்” என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.