அமர்நாத் யாத்திரை, கடந்த ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெற இருந்தது. ஆனால், யாத்திரைக்கு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாகக் கூறி, யாத்திரையை ரத்து செய்தது மத்திய அரசு. மேலும், காஷ்மீரில் உள்ள வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை, உடனடியாக வெளியேறுமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதனால், ஜம்மு காஷ்மீரில் எப்போதும் இல்லாத அளவுக்கு பல்லாயிரக் கணக்கான துணை ராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த பரபரப்புக்கு நடுவே இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தானிய அதிரடிப் படையினர் மற்றும் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. சுட்டுக்கொல்லப்பட்ட 7 பாகிஸ்தானியர்களின் உடல்களை வெள்ளைக் கொடியுடன் வந்து எடுத்துச் செல்ல இந்திய ராணுவம் அனுமதியளித்தது.
இந்நிலையில், எல்லையில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவி மக்கள். இந்தியா 1983ம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தத்தை மீறி கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் இந்தியா அச்சுறுத்தலாக உள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கவனத்தில் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டால் மட்டுமே தெற்கு ஆசியாவில் அமைதி நிலவும். காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் மக்களுடைய துன்பமான நீண்ட இரவை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது.'' என இந்தியாவை குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.