அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்தனர்.
இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்பட்டபோது ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன், உடன் இருந்ததாக அல்-கொய்தா அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனது தந்தையை கொன்றதற்காக பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் அமெரிக்கர்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்தார் ஹம்சா பின்லேடன்.
ஒசாமாவுக்கு பின்னர் ஹம்சா அல்-கொய்தா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றார். இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு ஹம்சா பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது.
ஹம்சா பின்லேடன் பற்றி தகவல் அளிப்பவருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை சன்மானமாக அளிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில், ஒசாமாவின் மகன் ஹம்சா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஹம்சா கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹம்சா பின்லேடன் இறந்த தேதி மற்றும் இடம் தொடர்பாக எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.