ஈராக்கை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நாடியா முராத். போரில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளான பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அந்நாட்டில், சிறுபான்மையினரான யாசிதி இன பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக, தீவிரமாக போராடி வருபவர். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிய நாடியா முராத் மூன்று மாதங்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவரது தாயாரும், ஆறு சகோதரர்களும் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிய நாடியா, ஐ.நா., முகாமுக்கு வந்து சேர்ந்தார். பின், யாசிதி பெண்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால், நுாற்றுக்கணக்கான பெண்கள், விடுவிக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் ஐ.நா., அமைப்பின் துாதராகவும் முராத் பணியாற்றி வருகிறார். இவருக்கு, கடந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நாடியா முராத் நேற்று கலந்து கொண்டார். அங்கு பேசிய போது, தன் குடும்பத்தில் தாயும், தனது 6 சகோதரர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாகக் முராத் கூறியுள்ளார். யாஜிடி இனப் பெண்கள் தீவிரவாதிகளால் கொடூரமாக பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , “உங்களுக்குத்தானே நோபல் பரிசு கிடைத்தது? அது பாராட்டுக்குரியது. உங்களுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் நாடியா முராத் சற்று திகைத்துபோனார். தொடர்ந்து பேசிய நாடியா முராத், பெண் அகதிகளின் மறுவாழ்வுக்காக தாம் உழைத்தற்தாக வழங்கப்பட்டதாக கூறினார். நாடியா முராத்துக்கு எதற்காக அமைதி பரிசு வழங்கப்பட்டது என்பது கூட தெரியாமல், அவரிடமே அக்கேள்வியை கேட்ட, ட்ரம்ப்பின் செயலை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.