இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரனா விஜய் மல்லையா, கடந்த ஆண்டு இந்திய வங்கிகளில் ரூ. 9,000 கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். அவரை கைது செய்து அழைத்து வர முயற்சிகள் நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், விஜய் மல்லையாவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் லண்டனில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளையும் பார்க்க செல்கிறார். சமீபத்தில் கடந்த மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையாவை “இவன் ஒரு திருடன்” என அவரை சூழ்ந்துகொண்டு இந்தியர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் கூலாக காரில் ஏறிச் சென்றார் மல்லையா.
அதனைத் தொடர்ந்தும் தற்போது, மேற்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னணி வீரர் கிறிஸ் கெயிலை விஜய் மல்லய்யாவை சந்தித்தது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் இருவரும் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “கெயிலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, பிடித்திருந்தது” என அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பிடித்து கொண்ட இந்தியர்கள், கிறிஸ் கெயில் மற்றும் விஜய் மல்லையா சந்திப்பு பதிவில் ‘சோர்’ (திருடன்) என கமென்ட் செய்துள்ளனர்.
இதனையடுத்து விஜய் மல்லையா, “ யுனிவர்ஸ் பாஸ் மற்றும் எனது நண்பரான கிறிஸ் கெயில் இடையான சந்திப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. மேலும் கடந்த ஒருவருடமாக, இந்திய வங்கிகளில் நான் வாங்கிய கடனை முழுவதுமாக திருப்பி தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளேன். என்னை திருடன் என சொல்லும் நீங்கள், நான் பணம் திரும்பி செலுத்த தயாராக இருந்தும் ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என கேளுங்கள். அப்போது தெரியும் யார் திருடன் என்று..” என மல்லையா குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து மீண்டும் ஒருபதிவில், மல்லையா பதிலளிக்கையில், “ என்னை எல்லோரும் திருடன் என்று சொல்லி வருகிறீர்கள். உண்மையில், நான் ஏன் திருடன் ஆக்கப்பட்டேன் என்பதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நான் வாங்கிய பணத்தை 100 சதவீதம் திரும்ப தரத் தயாராக உள்ளேன். உங்கள் வங்கிகள் அதை வாங்க மறுக்கின்றன. அவர்களிடம் ஏன் எனக் கேளுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மல்லையாவின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இவ்வளவு காலம் விஜய் மல்லையா தப்பித்து ஓடிவிட்டார், பணத்தை திருப்ப தர மறுக்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளை அரசு கூறி வந்த நிலையில், இது புது விவாதத்தை கிளப்பி உள்ளது.
விஜய் மல்லையாவின் மோசடிகள் அனைத்திலும் வங்கிகளுக்கும், ஆளும் பா.ஜ.க அரசிற்கும் தொடர்பு உள்ளதாகவும், இதனை முழுமையாக விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.