மக்களின் அன்றாடத் தேவைக்கு பணம் எவ்வளவு முக்கியப் பங்கினை வகிக்கிறது என நம் எல்லோருக்கும் தெரியும். மக்கள் வாழ்நாள் முழுவதும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உழைத்து வருகின்றனர்.
எப்போதாவது சாலை ஓரத்தில் கேட்பாரற்று பணம் கிடந்தால் பெரும்பாலான மக்கள் அதனைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து விடுவார்கள். ஒருவேளை ஆகாயத்தில் இருந்து திடீரென பணம் கொட்டினால் பெரும்பாலானோர் அதனை எடுக்கத்தான் முயற்சி செய்வார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லான்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அந்த பகுதியில் உள்ள சாலைகளில் திடீரென ஆகயாத்தில் இருந்து தாள்கள் பறந்து வந்துள்ளன. அந்த பகுதியில் வந்த வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பார்வையிட்டுள்ளனர். அப்போதுதான் பறந்து வந்தவையெல்லாம் பணம் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் உற்சாகம் அடைந்த வாகன ஓட்டிகள் பணத்தை எடுத்து சேகரிக்கத் தொடங்கினர். அதனைப் பார்த்த அந்த வழியில் வந்த வேறு வாகன ஓட்டிகளும் வாகனத்தை ரோட்டில் நிறுத்திவிட்டு சிதறிக் கிடந்த பணத்தை எடுத்துள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, போலீசார் விரைந்து அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பறந்து வந்த பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பகுதியில் வந்த கண்டெயினர் லாரியின் கதவு எதிர்பாராத விதமாக திறந்துள்ளது. அப்போது அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் காற்றின் வேகத்தில் பறந்து சாலை ஏங்கும் சிதறியுள்ளது. 1,75,000 டாலர் மதிப்புடைய பணம் சாலையில் சிதறியுள்ளது. இது இந்திய மதிப்பில் 1.2 கோடி ரூபாயாகும்.
சிலர் அந்தப் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் அளித்துவிடுங்கள் என்று சேகரித்த பணத்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களின் நேர்மையை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.