தன்னை இந்தியாவுக்கு நாடுகடத்தக் கூடாது என, லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவாரா என்பது இன்றைய தீர்ப்பின் மூலம் தெரியவரும்.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்தியாவின் பல்வேறு வங்கிகளில், ரூபாய் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவிலிருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார்.
விஜய் மல்லையாவை நாடு கடத்தக் கோரி, இந்தியா தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், மல்லையா தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகளால் தாமதம் ஏற்பட்டது.
மல்லையா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடியான நிலையில், லண்டன் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. விஜய் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆனாலும், கீழ் நீதிமன்றங்களில் முன்னர் கருத்தில் எடுக்கப்படாத புதிய காரணங்களை மல்லையா தரப்பு எடுத்துரைத்தால் மட்டுமே, அவர் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுவார் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டால், அடுத்த 28 நாட்களில் மல்லையாவை இந்தியா அழைத்து வரமுடியும் எனக் கூறப்படுகிறது.