ஆண்டுதோறும் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று (செப்.07) கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு பலரும் தங்கள் தெருக்கள், வீடுகள் என விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். மேலும் அவல், பொரிகடலை, லட்டு என இனிப்பு பலகாரங்களும் வைத்து வழி படுவர்.
இந்த சூழலில் ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த லட்டுவை மர்ம நபர் திருடும் வீடியோ வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. தெலங்கானா ஐதராபாத்தில் அமைந்துள்ளது பச்சுபள்ளி என்ற பகுதி. இங்கு அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.
அப்போது விநாயகர் கையில் லட்டுவும் வைக்கப்பட்டிருந்தது. இந்த லட்டுவானது ஆண்டுதோறும் ஏலத்தில் விடபட்டு, அதில் கிடைக்கும் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த குடியிருப்பின் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த லட்டுவை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அந்த பகுதி மக்களிடையே உள்ளது.
இந்த சூழலில் இந்த லட்டுவை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். அதாவது நேற்று இரவு சரியாக சுமார் 1 மணியளவில் அனைவரும் உறங்க சென்ற நிலையில், யாரும் இல்லாத அந்த நேரத்தில் மாஸ்க் அணிந்த மர்ம நபர் அந்த லட்டுவை திருடியுள்ளார். மறுநாள் காலை அந்த குடியிருப்பு வாசிகள் வந்து பார்க்கையில் விநாயகர் கையில் இருந்த லட்டு காணாமல் போயுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சிசிடிவியை சோதனை செய்ததில் லட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பலர் மத்தியிலும் பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இதுபோல் லட்டு திருட்டு சம்பவம் அரங்கேறும் என்பது குறிப்பிடத்தக்கது.