இப்போது இருக்கும் இளைஞர்கள் பலர் தங்களது நண்பர்களின் பிறந்த நாளை சாலையிலேயே கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்களின் இந்த கொண்டாட்டம் சாலையில் இருக்கும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதையே மறந்து விடுகிறார்கள்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகச் சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய மூன்று இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி காசியாபாத் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு மூன்று இளைஞர்கள் கார் மீது ஏறி தங்களது நண்பன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது ஒரு இளைஞர் கையில் வைத்திருந்த புஸ்வானம் போன்ற பட்டாசைக் கொளுத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மற்றொரு இளைஞர் கையிலிருந்த பணத்தை அங்கு இருந்த மக்கள் முன்னிலையில் வீசினார். இதனால் அந்த வழியாக வந்த பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதையடுத்து, பொதுமக்களில் ஒருவர் இந்த வீடியோவை குறிப்பிட்டு 'அதிகாரிகள் கவனத்திற்கு' என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூன்று இளைஞர்களும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் தங்களது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.