பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருக்குத் தொடர்ந்து வயிற்று வலி இருந்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது வயிற்றில் உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பிறகு அறுவை சிகிச்சை செய்தால்தான் வெளியே எடுக்க முடியும் என அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுதான் அவரது வயிற்றுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட சின்ன சின்ன பொருட்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு மூன்று மணி நேர அறுவை சிகிச்சையில் அவரது வயிற்றிலிருந்த இயர்போன்கள், வாஷர்கள், நட்ஸ் மற்றும் போல்ட், கம்பிகள், ராக்கிகள், லாக்கெட்டுகள், பட்டன்கள், ரப்பர்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்தனர்.
இது குறித்துக் கூறும் மருத்துவர் அஜ்மீர் கல்ரா, "இதுபோன்ற ஒரு அறுவை சிகிச்சை செய்வதது முதல்முறை. இவர் 2 ஆண்டுகளாக வயிற்றுப் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டுள்ளது. இருந்தாலும் அவரது உடல் நிலை சீராக இல்லை. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்" என தெரிவித்துள்ளார்.
மேலும், இது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்போது எப்படி இந்த பொருட்களை எல்லாம் அவர் உட்கொண்டார் என்று தெரியவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட அவர் எப்படி இந்த பொருட்களைச் சாப்பிட்டார் என்று எங்களுக்குத் தெரியவில்லை." என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.