பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1,717 கோடியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் ககாரியா, அகுவானி, சுல்தாங்குஞ்ச் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது.
இந்த பாலத்திற்கான பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென பாலம் இடிந்து கங்கை நதியில் விழுந்தது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பாலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பாலம் இடிந்து விழுவது இது முதல்முறையில்லை. ஏற்கனவே 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புயல் காரணமாகப் பாலத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாகப் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் பாலத்தின் உறுதி தண்மையை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாலம் இடிந்து விழுந்ததிற்குப் பொறுப்பேற்று நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.