பொதுவாக ஐடி போன்ற நிறுவனங்களில் ஊழியர்கள் தங்கள் நேரத்தையும் மறந்து பணி புரிந்து வருவர். ஐடி வாழ்க்கை என்றால் வெளியில் இருந்து பார்க்க ஜாலியாக இருந்தாலும், உள்ளே இருக்கும் கடினம் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும். தொடர்ந்து அங்கே இருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் கூட நேரத்தை செலவழிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
8 மணி நேரம் அலுவல் பணி நேரமாக இருந்தாலும், ஐடி நிறுவனங்களில் மட்டுமே 10-12 மணி நேரம் வேலை பார்க்கும் சூழல் உள்ளது. ஆனால் அவர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் மீதமுள்ள பணி நாளில் அதிக பணி சுமைகளில் அவதிப்படுகின்றனர்.
பல ஐடி நிறுவனங்களில் இதற்காகவே ஊழியர்களுக்கு இலவசமாக சாப்பாடு வழங்கி வருவர். அவர்கள் நாள்தோறும் படாத பாடுபட்டு உழைத்து வருவர். அவர்கள் உடலுக்கு வேலை இல்லை என்றாலும், மனதுக்கும் மூளைக்கும் அதிக வேலை கொடுக்கப்படும். இதனாலே அவர்களில் சிலர் மன நல பிரச்னைக்கு உள்ளாகுகின்றனர்.
சில ஊழியர்கள் பணி சுமை காரணமாக தங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. வேலையை இழந்தால் கூட பரவாயில்லை சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க சில ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போதிய சுதந்திரம் கொடுக்கிறது. மேலும் வேலையை மகிழ்ச்சியாக செய்யவும் அறிவுறுத்தி வருகிறது.
அதோடு பணி நேரங்கள் முடிந்ததும் விரைவில் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறுகிறது. அந்த வகையில் தற்போது ஒரு நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஏதுவான வகையில் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதாவது பணி நேரம் முடிந்ததும் அவரவர் கம்ப்யூட்டர் சிஸ்டம் தானாகவே ஷட் டவுன் ஆகிவிடும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் அமைந்துள்ளது SoftGrid Computers எனும் ஐடி நிறுவனம். நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரியும் இங்கு, நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஊழியர்கள் அவர்களது பணி நேரம் முடிந்த பிறகு கம்ப்யூட்டர் சிஸ்டம் தானாகவே ஷட் டவுன் ஆகிவிடும்.
முதலில் சிஸ்டம் அவர்கள் பணி முடிய 10 நிமிடங்களுக்கு முன்பு 'Warning' கொடுக்கும். பின்னர் அது தானாகவே அணைந்துவிடும். அந்த சிஸ்டத்தில், "உங்கள் பணி நேரம் முடிந்தது. இன்னும் 10 நிமிடங்களில் நிறுவனத்தின் சிஸ்டம் தானாக ஷட் டவுன் ஆகி விடும். தயவு செய்து வீட்டுக்கு கிளம்புங்கள்" என்று குறிப்பிட்டு எச்சரிக்கை விடுக்கும்.
இதன் மூலம் பணியாளர்களின் வாழ்க்கை முறை சீராக இருக்கும் என்றும், ஊழியர்கள் எந்த வித மன உளைச்சலும் இல்லாமல் பணி செய்வர் என்றும் அந்நிறுவனம் கருதுகிறது. இதுகுறித்து அங்கு பணி புரியும் பெண் ஊழியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு விளம்பரமோ அல்லது கற்பனையோ இல்லை.. இதுதான் எங்கள் அலுவலகத்தின் நிதர்சனம்!! SoftGrid Computers.. எனது முதலாளி #WorkLifeBalance ஐ ஆதரிக்கிறார். அவர்கள் இந்த சிறப்பு நினைவூட்டலை வைத்துள்ளனர், இது வணிக நேரத்திற்குப் பிறகு எனது டெஸ்க்டாப்பைப் லாக் செய்து எச்சரிக்கை விடுக்கிறது.
வணிக நேரத்திற்கு வெளியே அழைப்புகள் மற்றும் அஞ்சல்கள் இல்லை !! இது அற்புதம் இல்லையா? இது எங்கள் அலுவலகத்தின் நிஜம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தின் இந்த முயற்சி தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது.