கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவில் கனடா நாட்டை சேர்ந்த காலேப் ஃப்ரீசென் என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் சாலையில் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அங்கு மெக்டொனால்டு உணவகத்தை பார்த்துள்ளார். உடனே இவருக்கு அங்குள்ள உணவை சாப்பிட வேண்டும் என தோன்றியுள்ளது.
ஆனால், அந்த நேரத்தில் அந்த உணவகம் மூடப்பட்டு டெலிவரி செய்யும் நபர்களுக்கு மட்டுமே உணவு கொடுக்கப்பட்டுள்ளதை கவனித்துள்ளார். உடனே தன்னிடம் இருந்து ஸ்மார்ட் போனை எடுத்து அதில் இருந்த ஸ்விக்கி செயலி மூலம் அந்த உணவகத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார்.
மேலும்,டெலிவரி செய்யும் இடத்தையும் அந்த உணவகம் இருந்த இடத்தையே குறித்து உணவை ஆர்டர் செய்துள்ளார். இந்த ஆர்டர் சஞ்சய் என்ற டெலிவரி செய்யும் நபருக்கு சென்றுள்ளது. அதன்படி அந்த உணவை வாங்கிய சஞ்சய் டெலிவரி செய்யும் இடமும், உணவை வாங்கிய இடமும் ஒரே இடம்தான் என்பதை கண்டு குழப்பமடைந்துள்ளார்.
பின்னர் அவரின் அருகிலேயே உணவை ஆர்டர் செய்த காலேப் ஃப்ரீசென் அதே இடத்தில் இருப்பதை அறிந்து சிரித்துக்கொண்டே ஆர்டர் செய்த உணவை வெறும் 10 நொடிகளில் டெலிவரி செய்துள்ளார். இந்த சம்பவத்தை காலேப் ஃப்ரீசென் வீடியோவாக பதிவு செய்து அதை இணையதளத்தில் வெளியிட இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.
இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள காலேப் ஃப்ரீசென் "நள்ளிரவில் மெக்டொனால்டுக்கு சென்றிருந்தேன்.. அவர்கள் கடையை மூடிவிட்டதாகச் சொன்னாலும், உணவை டெலிவரி செய்துகொண்டிருந்தார்கள். உடனே நான் என்ன செய்யலாம் என்று யோசித்து ஸ்விக்கி மூலம் மெக்டொனால்டில் உணவை ஆர்டர் செய்தேன். வெறும் பத்தே நொடிகளில் டெலிவரி முடிந்தது" என்று கூறியுள்ளார்.