மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் அஸ்வானி. இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி இரவு சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில் பிரதீப் அஸ்வானிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இது குறித்து அவரது உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் பிரதீப் அஸ்வானியின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தானமாகப் பெற்றனர். இதில் பிரதீப் அஸ்வானியின் இதயம் மட்டும் ராணுவ வீரர் ஒருவருக்குப் பொருத்துவதற்காக நேற்று ராணுவ விமானம் மூலம் புனேவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மற்ற உறுப்புள் தேவையானவர்களுக்குப் பொருத்துவதற்கான நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துள்ளது.
பிரதீப் அஸ்வானியின் உடல் உறுப்புகள் தானமாய் பெறப்பட்டதை அடுத்து அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி, மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் பிரதீப் அஸ்வானியின் இதயம் ராணு வீரருக்குப் பொருத்தப்படுவதால் நெகிழ்ச்சியடைந்த அவரது சகோதரி நீலம் குஷ்லானி, "மறைந்த எனது சகோதரனின் இதயம் ராணுவ வீரருக்கு பொருத்தப்பட உள்ளது எங்கள் குடும்பத்திற்குப் பெருமையாக உள்ளது. ராணுவ வீரருக்கு இதயம் பொருத்தப்படுவதால் என் சகோதரர் ஒரு ராணுவ வீரராக வாழ்ந்து நாட்டுக்குச் சேவை செய்வார் என்று நாங்கள் உணர்கிறோம்" என தெரிவித்துள்ளார்.