பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் நடிகை ஆலியா பட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.
அந்த படத்தை அடுத்து நடிகர் ரன்பீர் கபூர் 'தூ ஜூதி மெயின் மக்கார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், அவ்வப்போது விளம்பரங்களிலும் நடித்து வருவார். குறிப்பாக FLIPKART, LAYS, COCO COLA, LENOVA உள்ளிட்டவை ஆகும்.
இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவரை பொதுவெளியில் பார்த்தால் கூட பல ரசிகர்கள் இவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வர். அந்த வகையில் சாலையில் ரன்பீர் சென்று கொண்டிருப்பதை பார்த்த அவரது ரசிகர்களில் ஒருவர் அவருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார்.
அப்போது செல்ஃபி சரிவரவில்லை என்று ஆத்திரத்தில் அந்த ரசிகரின் செல்போனை நடிகர் ரன்பீர் கபூர் தூக்கி எறிந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏற்படுத்தியது. மேலும் #angryranbirkapoor என்ற ஹேஷ்டாகும் ட்ரெண்டாகி வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான முழு வீடியோ மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில், ரசிகர் ஒருவர் நடிகர் ரன்பீர் கபூருக்கு அருகே நின்று கொண்டு செல்ஃபி எடுக்க முயல்கிறார். அப்போது செல்போனில் க்ளிக் செய்தும் செல்ஃபி படம் விழவில்லை. மேலும் அவரது மொபைலில் 'டச்' சரியாக வேலை செய்யவில்லை.
எனவே மீண்டும் அந்த ரசிகர் முயல்கிறார். அப்போதும் க்ளிக் ஆகவில்லை. இதனால் கடுப்பான நடிகர் ரன்பீர் கபூர் ரசிகரின் செல்போனை வாங்கி பின்னாடி தூக்கி வீசுகிறார்.
தொடர்ந்து ,தான் கொண்டு வந்த ஒரு புது மொபைல் போனை தனது பிஏ-விடமிருந்து வாங்கி அதனை தனது ரசிகருக்கு கொடுக்கிறார். அவர் கொடுத்த அந்த மொபைல் OPPO RENO 8T - 5G ஆகும். பின்னர் அதனை வைத்து ரன்பீருடன் அவரது ரசிகர் selfie எடுக்கிறார். இந்த வீடியோவை OPPO இந்தியாவின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் இந்த மொபைல் வரும் பிப்ரவரி 23-ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தனது விளம்பர நோக்கில் முதல் பாதியை மட்டும் வெளியிட்ட விளம்பர குழுவினர், தற்போது முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அண்மை காலமாகவே இதுபோன்ற புது விளம்பர யுக்திகளை பாலிவுட் பிரபலங்கள் பின்பற்றி வருகின்றனர். முன்னதாக அனுஷ்கா ஷர்மா 'பூமா' நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடர் என்று அறிவிக்க இதே போன்ற சில விளம்பர யுத்திகளை கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.