கடந்த 2005-ம் ஆண்டு வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த படம்தான் சந்திரமுகி. இந்த படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்து எடுக்கப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நாட்டிலுள்ள அனைவரும் அறிந்த ஒரு கதாபாத்திரம்தான் சந்திரமுகி. "லக லக லக.." என்ற வார்த்தை அனைவர் மத்தியிலும் மிக வரவேற்பை பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது சந்திரமுகி 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சந்திரமுகியாக இந்தி நடிகை கங்கனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது திடீரென இளம்பெண் ஒருவர் சந்திரமுகி வேடத்தில் மெட்ரோ ரயிலுக்குள் புகுந்து பயணிகளை பயமுறுத்தி வந்துள்ளார். அதாவது டெல்லி நொய்டா பகுதியிலுள்ள மெட்ரோ இரயிலுக்குள் இளம்பெண் ஒருவர் சந்திரமுகி வேடத்தில் நுழைந்துள்ளார். கோபத்தில் உள்ளே நுழைந்த அவர், அங்கிருந்த பயணிகளையும் பயமுறுத்த முயற்சித்தார்.
சிலர் எழுந்து நகர்ந்தாலும் பலரும் அதனை நின்றபடியும், அமர்ந்தபடியும் வேடிக்கை பார்த்தனர். மேலும் அதனை கண்டு யாரும் பெரிதாக அஞ்சவில்லை, மாறாக எரிச்சலடைந்தார்கள். பலரும் இப்படி ஏதாவது ஒரு ரியாக்ஷன் கொடுக்க, ஒரு இளைஞர் மட்டும் தனது காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அதனை கண்டுக்காமல் இருந்தார்.
அவரிடம் போய் அந்த சந்திரமுகி வம்பிழுத்த போதிலும் முதலில் அதனை கவனிக்காமல் தனது வேலையை மட்டுமே செய்தார். பிறகு அந்த சந்திரமுகியை கண்ட அவர், பார்த்து பதறி எழுந்து அங்கிருந்து நகர்ந்தார். தொடர்ந்து அங்கு சீட்டில் அமர்ந்திருந்த 2 பயணிகளை துரத்தியதை அடுத்து அவர் அந்த சீட்டில் அமர்ந்தார். இருப்பினும் சந்திரமுகியில் ஆவேசம் அடங்கவே இல்லை.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு ஒரு முக்கிய நகரத்தில் பயணிகள் பயணிக்கும் மெட்ரோவில் பயணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக இந்த இளம்பெண் நடந்து கொண்டதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.