சாதிப்பதற்கும் ஒரு செயலை செய்வதற்கும் எப்போது வயது ஒரு தடை அல்ல என்பதை 80 வயது மூதாட்டி ஒருவர் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். மும்பையில் கடந்த ஞாயிறு அன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் கூட யாருக்கும் தெரியாது.
ஆனால் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 80 வயது மூதாட்டியைதான் சமூக ஊடகமே இன்று கொண்டாடி பாராட்டி வருகிறது. இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகவும் மூதாட்டி தற்போது உருவெடுத்துள்ளார்.
இந்த மாரத்தான் போட்டியில், மூதாட்டி 51 நிமிடத்தில் 4.2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். அவர் மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடும் வீடியோவை அவரது பேத்தி டிம்பிள் மேத்தா பெர்னாண்டஸ் என்பவர் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் மூதாட்டியைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 80 வயது மூதாட்டியின் பெயர் பாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. போட்டி முடிந்து பிறகு பேட்டி கொடுத்த மூதாட்டி, "மாரத்தானில் பங்கேற்பது இது 5வது முறையாகும். தினமும் மாரத்தான் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக" தெரிவித்துள்ளார்.