ஒரு கதை!
பாதிரியார்கள் நிறைந்த படகு அந்த தீவில் கரையொதுங்கியது. மூத்த பாதிரியார் கடவுள் தமக்கிட்ட பணி செய்யும் கடமையுணர்ச்சியுடன் இறங்குகிறார். பிற பாதிரியார்களும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர்.
நாகரிக மனிதரின் தடமே படாத தீவு அது. அங்கு பழங்குடி மக்கள்தான் வாழ்கின்றனர். பழங்குடி வாழ்க்கைதான். பழங்குடி நம்பிக்கைகள்தான். பழங்குடி பழக்கவழக்கங்கள்தாம். பழங்குடிகளுக்கு புனித விவிலியத்தையும் பரலோக ராஜ்ஜியம் அடையும் வழியையும் அறிமுகப்படுத்துவதே மூத்த பாதிரிக்கு கடவுள் இட்ட பணி!
குறுக்கு மறுக்காக இரண்டு கட்டைகளை வைத்து தூக்கி வரும் வெள்ளுடை கூட்டத்தைப் பார்த்து பழங்குடியினர் கூச்சலிடுகின்றனர். ஆயுதங்களைக் கொண்டு தாக்க ஓடி வருகின்றனர்.
பாதிரிகள் பயந்து சிலுவையை முன் காட்டியபடி பதுங்கி நிற்கின்றனர். மூத்த பாதிரி மட்டும் அஞ்சாமல் புன்னகையுடன் முன்னேறி செல்கிறார்.
திடுமென ஓடி வரும் கூட்டம் அமைதியாகி நிற்கிறது. அனைவரும் விலக உள்ளிருந்து ஆபரணங்களுடன் பழங்குடித் தலைவர் வருகிறார். கூட்டத்துக்கு முன் நின்று மூத்த பாதிரியை உற்று பார்க்கிறார்.
அவர்தான் தலைவர் எனத் தெரிந்ததும் பாவனைகளுடன் வானத்தையும் தன்னையும் காட்டி கைகூப்பிக் காட்டி ஒருவாறாக வந்த விஷயத்தை சொல்லி விடுகிறார் மூத்த பாதிரி. பழங்குடித் தலைவரும் புரிந்து கொள்கிறார்.
பாதிரிகளைக் கொண்டு ஜெபம் செய்வது, கீர்த்தனை பாடுவது, முழங்காலிடுவது ஜெபம் முடிந்து பிதா சுதன் பரிசுத்த ஆவி என சிலுவை போடுவது, மொழி முதலிய யாவற்றையும் மூத்த பாதிரி சொல்லிக் கொடுக்கிறார்.
கடவுளை அடையும் வழியை அவர் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை பழங்குடித் தலைவரும் புரிந்து கொள்கிறார். அதைப் பார்த்து கற்கும்படி சொல்ல, கூட்டத்தில் இருந்த சிலரும் பயின்று கொள்கின்றனர்.
வந்த வேலை முடிந்து விட்டது. காட்டுமிராண்டி கூட்டத்துக்கு கடவுளை அறிமுகப்படுத்திவிட்ட திருப்தியுடன் பாதிரிகள் புறப்படுகின்றனர்.
அலைகளை தாண்டி கடலுக்குள் படகு பயணித்துக் கொண்டிருக்கிறது. மூத்த பாதிரி பெருமிதத்துடன் வானை பார்த்துக் கொண்டே வருகிறார். மீனவர்களுக்காக கட்டளையிட்டு புயலை இயேசு அடக்கிய சம்பவம் நினைவுக்கு வந்தது. அறிவில்லாதவர்களுக்கு அறிவு வழங்குவதுதான் எத்தனை மகத்துவமான வேலை!
திடீரென ஒரு சத்தம்!
பாதிரியார்கள் எட்டி பார்க்கின்றனர். அவர்கள் கண்கள் முழுக்க ஆச்சரியம். மூத்த பாதிரியை ஓடிச் சென்று அழைக்கின்றனர். அவரும் விரைந்து வந்து எட்டிப் பார்க்கிறார். உடல் சில்லிட்டு போகிறது.
கடலின் மீது பழங்குடித் தலைவன் ஓடி வருகிறான்.
படகு நிற்கிறது.
"இயேசுதானே நீர் மீது நடந்தார். இவன் எப்படி" என அதிர்ச்சியுடன் மூத்த பாதிரி நிற்கிறார்.
ஓடி வந்தவன் மூச்சு வாங்கி தணிந்து மூத்த பாதிரியிடம் கேட்கிறான்:
"சாமி.. ஜெபம் முடிச்சு சிலுவை போடும்போது மேலே இருந்து போடணுமா, கீழே இருந்து போடணுமான்னு மறந்திடுச்சு. கொஞ்சம் சொல்றீங்களா"
எனப் பழங்குடித் தலைவன் கேட்க, கண்ணீர் தளும்பி தாரை தாரையாய் வழிய, மூத்த பாதிரி சொல்கிறார்:
"நீங்க ஜெபமே பண்ண வேண்டாம்பா. ஏற்கனவே கடவுள் உங்கக்கிட்டதான் இருக்கார்!"
படகு நகருகிறது.
பழங்குடித் தலைவன் புன்னகைக்கிறான்.