தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா பகுதியை அடுத்துள்ளது மூட்பல்லே என்ற கிராமம். இங்கு நேற்று 18 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த சில மர்ம கும்பல், தந்தையை தள்ளிவிட்டு மகளை கடத்தி சென்றுள்ளனர்.
மகள் கடத்தி செல்வதை கண்ட தந்தை, தனது பைக்கை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தார். ஆனால் அவர்களை பிடிக்கமுடியவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினர். அப்போது அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு பெண்ணை கடத்தியது பதிவாகியிருந்தது.
தொடர்ந்து விசாரிக்கையில் பெண்ணின் தந்தை, அதே பகுதியிலுள்ள ஜான் என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். முன்னதாக ஜானும், கடத்த பட்ட இளம்பெண்ணும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மைனர் என்பதால் போலீசில் பெண் வீட்டார் அளித்த புகாரின்பேரில், பெண்ணை மீட்டு ஒப்படைத்ததோடு, ஜான் மீது போக்ஸோ வழக்கு பதிவுசெய்யப்பட்டது தெரியவந்தது.
தற்போது அந்த இளம்பெண்ணுக்கு அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் இளம்பெண் கடத்தப்பட்டதால் பெண் வீட்டார் பெரும் பதற்றத்துடன் இருந்தனர். அதோடு கடத்தப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து கடத்தப்பட்ட பெண்ணை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அதோடு அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தன்னை கடத்தியது போல் தான் நாடகமாடியதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், "நானும் ஜான் என்கிற ஞானேஷ்வர் என்பவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வருகிறோம். என்னை அழைத்துச் செல்லதான் ஜான் அங்கு வந்தார்.
அவர் தனது முகத்தை மறைக்கும் முகமூடியை அணிந்திருந்ததால் நான் முதலில் குழப்பமடைந்தேன். பின்னர் அடையாளம் கண்டு, அவருடன் சென்று அவரது விருப்பப்படிதான் சென்றேன். தற்போது திருமணமும் செய்து கொண்டேன்" என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.