தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திருமறான். இவர் ஆறு மாதங்கள் குழந்தையாக இருக்கும் போதே அவரது தந்தை ராமசுந்தரம் உடல நலக்குறைவு காரணமாக மலேசியாவில் 1967ம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து கணவன் உடலை மலேசியாவிலேயே அவரது தாய் அடக்கம் செய்துவிட்டு திருமாறனை தென்காசித்து அழைத்து வந்துவிட்டார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து தாயும் உயிரிழந்துள்ளார். பின்னர் தந்தை, தாய் உயிரிழந்து விட்டதை அடுத்து ஏழை, எளிய மக்களுக்கு திருமாறன் உதவி செய்து வருகிறார்.
இதற்கிடையில் எப்படியாவது எனது தந்தையின் கல்லறையைக் கண்டுபிடித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அடிக்கடி வந்துள்ளது. இதனால் மலேசியால் தாங்கள் தங்கியிருந்த இடத்தை கூகுள் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் அவரது தந்தை ஆசிரியராக மலேசியாவில் பணியாற்றியவர் என்பதால் அவரது மாணவர்களையும் தேடியுள்ளார். இதில் மோகனராவ், நாகப்பன் ஆகியோர் விவரங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த 8ம் தேதி மலேசியா சென்று தந்தையின் மாணவர்கள் உதவியுடன் அவரது கல்லறையைக் கண்டுபிடித்துள்ளார்.
பிறகு 55 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையின் கல்லறையைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுது மெழுகுர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். இது குறித்தான புகழ் படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது.
தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் அவர்கள், தனது தந்தை ராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன்.
இந்தப் பயணத்தில், திருமாறன் அவர்களது அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் ராமசுந்தரம் அவர்கள் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட ராமசுந்தரம் அவர்களை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே!
தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திருமாறன் அவர்கள், ஆதரவற்றவராக அல்லாமல் பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன்.
வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்!"என தெரிவித்துள்ளார்.