அதிகாரிகளின் அலட்சிய போக்கை சுட்டிக்காட்டும் விதமாக, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நாய் போல் குரைத்து கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி தத்தா (Dutta). இவர் தனது பெயரை ரேஷன் கார்டில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். அதன்படி இவரது பெயரும் அவரது குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் Dutta என்ற பெயருக்கு பதிலாக Kutta (குத்தா) என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் மேற்கு வங்க மொழியில் 'நாய்' என்று பொருள்.
எனவே இந்த தவறை உடனே தத்தாவும் சரி செய்ய சொல்லி விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் அவரது பெயரை சரி செய்யவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த தத்தா, மீண்டும் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே சம்பவத்தன்று அப்பகுதிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் காரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அவர் வருவதை அறிந்த தத்தா, அவரது காரை மறித்து தனது கோரிக்கையை வித்தியாசமான முறையில் வைத்தார். அதாவது குத்தா என்று அவர் பெயர் மாற்றியிருப்பதால் குத்தா (நாய்) போன்றே அவர் குரைத்து தனது கோரிக்கை மனுவை அதிகாரியிடம் கொடுத்தார்.
இவரது நடவடிக்கையால் புரியாமல் குழம்பி போய் இருந்த அதிகாரி, பின்னர் சற்று கடுப்பாகி அவரது கோரிக்கை மனுவை உடனே பெற்று படித்துவிட்டு விரைவில் சரி செய்வதாக கூறி அங்கிருந்து தனது காரில் சென்றார். இது தொடர்பான வீடியோவை அங்கிருந்த பொதுமக்கள் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர்.
தற்போது இது வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தி தத்தா கூறுகையில், "நான் இதுவரை பல முறை எனது பெயரில் உள்ள தவறை திருத்த விண்ணப்பித்து வெறுத்துவிட்டேன். அதனால் தான் அதிகாரி முன் நாய் போல குரைத்து காட்டினேன். எங்களை போன்ற எளிய மக்கள் எத்தனை முறை தான் வேலையை விட்டுவிட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்க முடியும்" என்று கடும் வேதனையுடன் தெரிவித்தார்.