உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலருக்கு ரத்தத்தின் பிளாஸ்மா தேவை அதிகரித்துள்ளது. இதனால் மாநில முழுவதும் பல இடங்களில் புதிதாக ரத்த வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரயாக்ராஜ்ஜில் ஜல்வாவில் உள்ள குளோபல் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பிரதீப் பாண்டே என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பிளாஸ்மா தேவைப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்காக அலகாபாத் பகுதியில் உள்ள ரத்த வங்கியில் பிளாஸ்மா வாங்கப்பட்டுள்ளது. அதில் ரத்தத்தின் பிளாஸ்மாவுக்கு சாத்துக்குடி ஜூஸ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த ரத்த வங்கி போலியானது என தெரியவந்துள்ளது. மேலும் பிளாஸ்மாவும், சாத்துக்குடி ஜூஸ் பார்ப்பதற்கு ஒரே மாதரி இருப்பதைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்துள்ளது.
இதை அடுத்து போலிஸார் போலியாக ரத்த வங்கி நடத்தியவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் போலி ரத்த வங்கிகள் குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் ப்ரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.