உலகில் கண் கண்ணாடிகள் கண்டுபிடிப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது கண் கண்ணாடி என்பது கண் பார்வைக்கானது என்பதை தாண்டி அழகுக்கானது என மாறிவிட்டது. இப்போது வரும் கண்ணாடிகள் எல்லாம் முதலில் அழகை மையமாக வைத்தே வடிவமைக்கப்படுகிறது.
அந்த கண் கண்ணாடியின் அடுத்த பரிணாமமாக வந்ததுதான் கான்டாக்ட் லென்ஸ்கள். கண்ணாடி அணிந்தவர்கள் சிலர் சில அசவுகரியங்களை சந்திப்பதால் அவர்கள் பெரும்பாலும் கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துகிறார்கள்.
கருவிழிக்குள் பொருந்தி இருக்கும் இந்த கான்டாக்ட் லென்ஸ்களால் சில ஆபத்துகளும் நேர்ந்து வருகிறது. சிலர் தூங்கும்போது கான்டாக்ட் லென்ஸ்களை கழட்டி வைக்க மறந்து பின்னர் அதனால் கண் பாதிக்கப்படுவதும் பல சமயங்களில் நடந்துள்ளது. அதேபோன்ற ஒரு சம்பவத்தில் பெண்ணின் கண்களில் 23 கான்டாக்ட் லென்ஸ்களை கண்மருத்துவர் ஒருவர் அகற்றும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவை சேர்ந்த கண் மருத்துவரான கேத்ரினா குர்தீவ் என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி ஒருவரின் கண் இமைக்குள்ளிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பல கான்டாக்ட் லென்ஸ்களை எடுக்கிறார். அந்த பெண்ணின் கண்களில் மொத்தம் 23 கான்டாக்ட் லென்ஸ்கள் இருந்ததாக அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவலில் இரவில் தூங்கப்போகும்போது காண்டாக்ட் லென்ஸ்களை கழற்றி வைக்க அந்த மூதாட்டி மறந்துவிட்ட நிலையில், காலையில் புதிதாக காண்டாக்ட் லென்ஸ்களை தொடர்ந்து அணிந்து வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலர் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும்போது எச்சரிக்கையோடு இருங்கள் என்று கூறியுள்ளனர்.