டைட்டானிக் படம் பார்த்திருக்கிறீர்களா?
அப்படத்தின் ஜாக் பாத்திரத்தை அவதானித்திருக்கிறீர்களா?
ஜாக்கின் வாழ்க்கை வித்தியாசமானது. ஜாக் சரியாக வெளிப்படும் ஓர் அற்புதமான காட்சி படத்தில் உண்டு.
பணக்காரர்கள் உணவருந்தும் இடத்தில் ரோஸின் அழைப்பின் பேரில் ஜாக்கும் அமர்ந்திருப்பான். அனைவரும் அவனை புழுவாக பார்ப்பார்கள். அவர்களின் பேச்சில் எள்ளல் இருக்கும்.
'இப்போது எங்கே வாழ்கிறீர்கள் ஜாக்?' என்பாள் ஒரு சீமாட்டி.
'தற்போது நான் டைட்டானிக்கில் வாழ்கிறேன். அடுத்து எங்கு இருப்பேன் என்பது கடவுளின் நகைச்சுவை உணர்ச்சியை பொறுத்த விஷயம்!' என்பான் ஜாக்.
அவன் சொல்லும் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் தன்மையில் அங்கு ரோஸை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். அவள் மட்டும் சுவாரஸ்யம் அடைவாள். விதிகளுக்கு உட்பட்ட வாழ்க்கையில் அலுத்து போன ரோஸுக்கு அவனது நிச்சயமற்ற வாழ்க்கை சாகஸமாக தெரிகிறது.
வாழ்க்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறான் மேட்டுக்குடிக்காரன் ஒருவன். ஒரு சீமாட்டி, "இப்படியான நிச்சயமற்ற வாழ்க்கை வாழ்வது சரியானது என நினைக்கிறீர்களா?" என அருவருப்புடன் கேட்கிறாள்.
"ஆம். எனக்கு தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கிறது. தேவையான காற்று என் நுரையீரலில் இருக்கிறது. படம் வரைய சில காகிதங்கள் இருக்கின்றன. என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்றி ஒவ்வொரு நாள் விழிப்பதும் யாரை சந்திப்போம் என தெரியாமல் இருப்பதும் எங்கு சென்று சேருவேன் என தெரியாமலும் போய்க்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது. இதுக்கு முன்னாடி ஒரு பாலத்துக்கு அடியிலே படுத்திருந்தேன். இப்போ உலகின் பகட்டான கப்பலில் உங்கள மாதிரி பெரிய மனிதர்களோட அமர்ந்து ஷேம்பெயின் குடித்து கொண்டிருக்கிறேன்."
ஜாக்கின் இந்த வாழ்க்கை எத்தனை அழகானது, கவித்துவமானது!
வாழ்வென்பது அதனளவில் அவ்வளவு எளிமை ஆனதுதான். நாம்தான் அதிகமாக சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். அதனால்தான் ஜாக்கால் அப்படியொரு காதலை வழங்க முடிந்தது. ரோஸால் அவனுடனான சாகச பயணம் வர முடிந்தது.
ஜாக்குகளின் வாழ்க்கை அழகானவை. அடுத்தவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ரோஸ்களுக்கு மட்டும் புரியும். ரோஸ்கள் சிறைபட்ட ஜாக்குகள்!
அதனால்தான் ரோஸ் தற்கொலைக்கு முயலும்போது ஜாக் காக்கிறான். அவன் சென்றிருந்த விபச்சாரிகளை கலையாக்குகிறான். ரோஸுடன் ஆடுவதை பெண் குழந்தை பார்த்து முறைக்கும்போது, "உன்னை நான் மறந்துவிடவில்லை" என்கிறான்.
ஜாக் வாழ்க்கையில் நிறைய பேர் வந்து போகிறார்கள். சீட்டாடுபவர்கள், விபச்சாரிகள், குழந்தைகள், நண்பர்கள், சீமாட்டிகள், காதலிகள், மேட்டுக்குடிகள், எலிகள், கப்பல் சிப்பந்திகள், பீர் குடிக்கும் நண்பர்கள் என நிறைய கடந்து செல்கிறான் அவன். ஆனால் அவன் கடக்கும் யாவும் அவன் கடந்தபின் அர்த்தம் கொள்கின்றன. எல்லாவற்றிலுமே அவன் மிச்சம் கொஞ்சத்தை விட்டு செல்கிறான்.
ஜாக்குகளின் வாழ்க்கை அழகானவை. அடுத்தவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. ரோஸ்களுக்கு மட்டும் புரியும்.
ஜாக்கால் மட்டும்தான் பாலத்துக்கடியில் படுத்துக்கிடந்து, பகட்டான கப்பலில் பயணித்து, மேட்டுக்குடி மக்களுடன் ஷேம்பெயின் குடித்து, காவியமாய் ஒரு காதலியை அடைந்து, புணர்ந்து, இறுதியில் அவளுக்கு கொடுத்த வாக்கின்படி நட்சத்திரங்களுக்கு அழைத்து சென்று, அவளை காப்பாற்றி, உயிர் துறக்க முடியும்.
ரோஸின் ஓவியமாக ரோஸிடமும் ஜாக் மிஞ்சி நிற்கிறான்.
ஜாக்குகளின் வாழ்க்கை அழகானவை. அடுத்தவர்களுக்கு புரிய வாய்ப்பில்லை.