சீனாவில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் விலங்கியல் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஒரு குடும்பம் சுற்றி பார்க்க சென்றுள்ளது. அப்போது பல்வேறு விலங்குகளை கண்ட அந்த குடும்பத்தினர், யானையையும் கண்டுள்ளனர்.
அப்போது அந்த குடும்பத்தில் உள்ள குழந்தையின் ஒற்றைக்கால் ஷூ தவறி கீழே விழுந்தது. இதனால் கத்தி அழுத சிறுமி, அதை வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வேலி போட்ட கூண்டில் அடைக்கப்பட்ட யானையின் காலுக்கடியில் ஷூ விழுந்ததால், அதை குடும்பத்தினரால் எடுக்க இயலாது. எனவே அவர்கள் குழந்தையை சமாதான படுத்த முயன்றனர்.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, குழந்தை அழுவதை கண்ட யானை, தனது காலுக்கடியில் இருந்த ஷூவை தும்பிக்கையால் எடுத்து அந்த குழந்தையின் கையில் கொடுத்தது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் நெகிழ்ந்து போயினர்.
குழந்தை அழுத்தவுடன், ஷூவை எடுத்து கொடுத்த யானை தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு பெரிய உருவமாக பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் குழந்தை என்றால் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் பிடிக்கும் தானே என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.