புதுச்சேரி, காரைக்காலை அடுத்துள்ள அம்பாள் சத்திரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மண்டபம் ஒன்றில் பா.ஜ.க சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் சாதனை மற்றும் கனவு திட்டங்கள் தொடர்பான விஷயங்கள் பேசப்பட்டது. இதில் பா.ஜ.க மூத்த தலைவரான எச். ராஜா பங்கேற்று பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் மாநிலங்களுக்கான அதிகாரம் உரிய முறையில் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், "கொரோனாவால் உலக நாடுகள் தடுமாறிய நிலையில் 9% பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் பிரதமர் இந்தியாவை வழிநடத்தி வருகிறார். இதுதொடர்பான புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிர்வாகம், சுற்றுச்சூழலை பாதுகாக்க அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான புத்தகம் விரைவில் தமிழில் வெளியாகவுள்ளது" என்றார்.
அதோடு பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளரிடம், பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கோபப்பட்டதோடு "முட்டாள் தனமாக பேசக்கூடாது" என்று காட்டமாகவும் பேசியுள்ளார். மேலும் "பல வெளிநாட்டு மக்கள் இருந்துகொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மக்கள்.." என்று பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், அவருக்கு பின்னே அமர்ந்திருந்த பா.ஜ.க மாவட்ட தலைவர் துறை சேனாதிபதி ஆவேசப்பட்டு கேள்விகேட்ட பத்திரிகையாளரை வெளியே செல்லும்படி மிரட்டியுள்ளார்.
இதனால் அந்த இடம் பெரும் சலசலப்பான நிலையில், பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய பாஜக மாவட்ட தலைவரை கண்டிக்காமல், பத்திரிகையாளர் எச்.ராஜா கண்டித்ததால் மேலும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கூட்டம் கலைந்த பிறகும் ஆவேசம் தீராத பா.ஜ.க மாவட்ட தலைவர் துரை சேனாதிபதி, "நீ மாற்று மதத்தை சேர்ந்தவன்.. இப்படி தான் கேள்வி கேப்ப.." என்று கடுமையாக பேசியதோடு ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் துரை சோனதிபதி பேசும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பத்திரிகையாளர் உள்பட ஏராளமானவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.