"பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தர வசிப்பிடம் இருப்பதில்லை. நிரந்தரம் என்பதையே சுமையாக கருதிடும் பறவை நான்" என அன்பே சிவம் படத்தில் கமல் பேசியிருப்பார். ஆனால் வாழ்வில் இந்த 'பற்றறுதல்' சாத்தியமா?
கண்டிப்பாகக் கிடையாது. அப்படியிருந்தால் 'மனிதன் ஒரு சமூக மிருகம்' என்கிற அடிப்படையே அடிபட்டுவிடும்.
ஆனால் புத்தர் சொல்வதும் இந்த பற்றறுத்தலைதான். பல யோகிகளும் சொல்வதும், ஏன் Fight Club படத்தில் ப்ராட் பிட் 'The things you own end up owning you' என சொல்வதும் இந்த பற்றறுத்தலைத்தான்.
மனிதனை இயற்கை கைவிட்டுவிட்டது. அதனால்தான் அவன் மனிதப் பரிணாமத்தை அடைகிறான். அதே நேரம், இயற்கை ஒரு உயிருக்கு அளிக்கும் பாதுகாப்பு, அரவணைப்பு, உயிர் வாழ் தன்மை ஆகியவை மனிதனுக்கு தேவைப்படுகிறது. அவற்றை அவன் செயற்கையாக உருவாக்க வேண்டியிருக்கிறது. அதுதான் உடைமை, உறவு, சமூகம், அமைப்பு, அரசு என உருவாகிறது. ஆக, புத்தரின் சொல்படி, இந்த வாழ்க்கை உங்களுக்கு பிரச்சினைகளை கொடுக்கிறதெனில் அவற்றிலிருந்து தப்பிக்க ஒரே வழி, பற்றறுத்தல் தான்.
இதில் இயற்கையின் அழகான சூட்சுமம் ஒன்றுள்ளது. இயற்கையிலிருந்து விலகியதுதான் மனிதனின் பரிணாமம் என்றாகையில் பற்றற்று இயற்கையோடு இணைவது அவனை பரிணாமத்திலிருந்து விலக்கும். அதாவது அவன் அழிவான். அப்படி இணையவில்லையெனில்?
செயற்கையாய் வாழக் கற்றுக்கொண்டவன் தன் தேவைக்கு இயற்கையை அழித்து, வாழ் சூழலை குலைத்து, தானும் அழிந்துபோவான். இரண்டில் ஒன்றை தொடு என ஒரு விரலை இயற்கை காட்டுகிறது.
புறச்சூழலைத்தான் நாசமாக்குகிறோம் என்றால் அகத்தையும் அப்படியே ஆக்குகிறோம்.
அதற்குத்தான் புத்தர் துன்பத்தின் அடிப்படை பற்று கொள்ளுதல் என்கிறார். Possession! பற்றை விரும்பும் மூளையை வைத்துக்கொண்டு பற்றறுத்தால் தனிமையும் வெறுமையும் மனிதனைக் கொன்றுவிடும். இயற்கை கைவிட்ட மனிதன் மொத்த பிரபஞ்சத்திலும் ஒற்றை ஆளாக இருந்தால் எப்படி இருக்கும் எண்ணிப் பாருங்கள்?
அழுதே செத்துவிடுவான்.
ஆக தேவையென்ன எனில், பற்றுதல் இருக்கலாம். ஆனால் பற்றற்ற பற்றுதலாக இருத்தல் வேண்டும்.
நண்பர்களின் வாழ்வுகளில் பல முக்கிய முடிவுகள் எடுக்க நாம் பெரும் நம்பிக்கைக் காரணியாக இருந்திருப்போம். அந்த முடிவுகள் அவர்கள் வாழ்க்கையை முழுக்க மாற்றி சந்தோஷத்தை கொடுக்க வல்லதாக இருந்திருக்கும். நாமும் அவர்தம் சந்தோஷத்தை முன்னிட்டு அந்த மாற்றத்தை கொண்டு வர அவர்களுக்கு தடையாக இருந்தவற்றை மாற்றிக் கொடுத்திருப்போம்.
அவ்வளவுதான்.
அவர்கள் வாழ்வில் சந்தோஷப் பயணத்தை தொடங்கியிருப்பார்கள். அதிலேயே திளைத்து மேலும் செல்வார்கள். அந்த சந்தோஷத்தை ஏற்படுத்திய முக்கியக் காரணி நீங்கள் என அவர்கள் உணரும் நிலையையெல்லாம் தாண்டி அவர்கள் வாழ்க்கை மாறியிருக்கும். அப்போது உங்களுக்கு முன் இருக்கும் தெரிவுகள் இரண்டு.
நம்மை மறந்து விட்டார்கள் என நெக்குருகி “நேற்று இவன் ஏணி. இன்று இவன் ஞானி” என சோக கீதம் பாடி சொறிந்துவிட்டுக் கொள்ளலாம்.
இல்லையென்றால் ஒரு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு உங்கள் பயணத்தைத் தொடரலாம். முதல்வழி உங்கள் அகத்தை அலைக்கழிக்கப் போகிறது. ஏனென்றால் நீங்கள் பற்றை தொடர விரும்புகிறீர்கள்.
இரண்டாம் வழி உங்களை மேம்படுத்தப்போகிறது. ஏனெனில், நீங்கள் பற்றை அதன் வழியில் விட்டு உங்கள் வழியில் செல்கிறீர்கள்.
No regrets. எதிர்பார்ப்பற்ற வாழ்க்கை. வழிப்போக்கனைப் போல். நீங்கள் ஒன்றை, ஒன்றுக்கு செய்வதால், அது அதற்கு பதிலாக ஒன்றை, உங்களுக்கு செய்ய வேண்டுமென எதிர்பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில் அது வேறு, நீங்கள் வேறு. அது அப்படித்தான். நீங்கள் இப்படித்தான். இந்த புரிதல் உங்களுக்கு என்ன செய்யும். பற்றற்று பற்றுகளோடு இருக்கச் செய்யும். விலகல்களோடு விலக்கமின்றி வாழச் செய்யும்.
புரிகிறதா?