மனித குலத்தின் இறுதி எப்போது தொடங்கும்? காலநிலை மாற்றத்தில் தொடங்கும். ஏற்கனவே தொடங்கியும் விட்டது.
13750 கோடி வருடங்களுக்கு முன்னான பரம அணுவின் ஓரங்கமாக இருந்த நீங்கள் அதே அணுவின் மற்றொரு அங்கமாக இருந்து, உங்களோடு சேர்ந்து வெடித்து, இத்தனை காலம் கடந்து இங்கு வந்து, இப்போது இப்படி உங்களுடன் இருக்கும் சக மனிதனை பார்க்கையில் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் சக மனிதனை கொல்லும்போது என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் சக மனுஷியை வன்புணர்கையில் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள்? உங்களோடே இங்கு வந்து முளைத்தெழுந்திருக்கும் மரத்தை வெட்டுகையில் என்ன சிந்திப்பீர்கள்?
உங்களோடே வந்து இங்கு உருவானவனை ஒடுக்குகையில் எப்படி உணர்கிறீர்கள்? உங்களோடு வந்து உங்களுக்கு முன் உருவான உயிரினங்களை அழிக்கையில் என்ன தோன்றும் உங்களுக்கு? உங்களோடு வந்து உருவாகி, உங்கள் வீட்டை காத்து பேந்த பேந்த விழிக்கும் உங்கள் நாயைப் பார்க்கையில் எந்த மனவெளியில் இருப்பீர்கள்?
நாம் இப்போது இங்கு இப்படி இருக்க, நம்மோடு இங்கு இப்போது இருப்பவர்களும் இருப்பவைகளும்தான் காரணம்.
நாம் இருக்கும் நிலை சரி என்றால் அது நமக்கான வெற்றி மட்டுமல்ல. நம்மை சுற்றி இருப்பவர்களின் வெற்றியும் கூட. நாம் இருக்கும் நிலை தவறு என்றால் அது நம்மை சுற்றி இருப்பவர்களின் தவறு மட்டும் அல்ல. நம் தவறும் கூட.
ஒரு எலி கடவுளிடம் வரம் கேட்டதாம், பூனையிடம் இருந்து காப்பாற்ற தன்னை நாயாக மாற்ற வேண்டி. அவரும் மாற்றினாராம். சில நாட்கள் கழித்து மீண்டும் தியானித்து, ஓர் ஓநாயிடம் இருந்து காப்பாற்ற தன்னை புலியாக மாற்றிட வேண்டியதாம். அவரும் மாற்றுகிறார். சில நாட்கள் கழித்து மீண்டும் வேண்டி தன்னை யானையாக மாற்ற சொன்னதாம். அவரும் மாற்றி விடுகிறார். சில நாட்களில் மீண்டும் தியானம். உச்ச பரிணாமமான மனிதனுக்குதான் எல்லா உயிரினங்களும் பயப்படுகின்றன என்பதால் மனிதனாக தன்னை மாற்ற சொல்லி வேண்டியதாம். நல்ல கடவுள் போலிருக்கிறது, மீண்டும் மாற்றுகிறார். சில நாட்களில் மீண்டும் தியானம். மீண்டும் வேண்டல். இம்முறை பழைய எலியாகவே மாற்ற வேண்டி கோரிக்கை. காரணம் ஏதும் கேட்காமலேயே புன்னகைத்தபடி எலியாகவே மாற்றி மறைகிறார் கடவுள்.
இங்கு கடவுள் என்பது இயற்கை. ஆதியில் வெடித்த முதல் அணு! அதிலிருந்து வந்த இந்த மொத்த பிரபஞ்சமும், இருத்தலும் அவ்வப்போது தனக்கு உபத்திரவம் தருபவைகளை அழித்து மீண்டும் மூலவடிவ அணுக்களாக மட்டுமே மிஞ்ச செய்யும்.
வெற்று அணுக்களாக எந்த மமதையும் இன்றி நாம் மிஞ்சப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான காரணத்தை இயற்கையும் நமக்கு வழங்கப் போவதில்லை. என்ன காரணம் என நாம் கேட்க வேண்டியதும் இல்லை. ஏனெனில் உண்மை நமக்கு தெரியும்.