Generation Gap என பலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘தலைமுறை இடைவெளி’ என மொழிபெயர்க்கலாம். இரு தலைமுறைகளுக்கு இடையிலான புரிதல் இடைவெளியைத்தான் ‘தலைமுறை இடைவெளி’ எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஏன் தலைமுறை இடைவெளி ஏற்படுகிறது?
ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் இருக்கும் கலாச்சாரச் சூழலில் வாழ்கிறது. அடுத்து பிறக்கும் தலைமுறையில் முந்தையத் தலைமுறையின் சூழலோ கலாச்சாரமோ பெரும்பாலும் இருப்பதில்லை. அவர்களின் புரிதல் முற்றிலும் புதியச் சூழலில் உருவாகிறது. எனவே இடைவெளி ஏற்படுகிறது.
இடைவெளி குறைய முதலில் தலைமுறைகள் வாழ்ந்த சூழல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில பத்தாண்டுகளில் பிறந்த தலைமுறைகளை சில பெயர்களை கொண்டு வகைப்படுத்துகிறார்கள். Baby Boomers, Generation X, Millennials!
Baby Boomers தலைமுறை இரண்டாம் உலகப் போருக்கு பின் பிறந்தவர்கள். 1946 - 1964. இரண்டாம் உலகப் போரின் முடிவு என்பதால் பெருமளவு அரசியல் சார்பு இவர்களுக்குள் இருந்தது. அமெரிக்கா மீதான கோபம், கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு என இவர்களுக்கு லட்சியப்பூர்வ வாழ்க்கை வாழ இருந்தது. சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பு கொண்டிருந்த தலைமுறை. சமூக ரீதியாக மக்களுக்கான அரசுகள் உருவாகி பல்வேறு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்ட தலைமுறை.
Generation X: இந்த தலைமுறை baby boomers தலைமுறைக்கு பிறந்தவர்கள். 1965 தொடங்கி 1980களின் தொடக்கம் வரை இவர்களின் காலகட்டமாக குறிப்பிடப்படுகிறது. இந்த காலகட்டங்களில் சமூகம் வேறொரு பாணியிலான வாழ்க்கைமுறைக்கு தள்ளப்படுகிறது.
கிட்டத்தட்ட உலகமயமாக்கலை நோக்கிய சீர்திருத்தங்களுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டன. 'தாழிடப்பட்ட' (latchedkey) தலைமுறை எனவும் சொல்லப்படுகிறார்கள். ஏனெனில் இத்தலைமுறையின் குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் வீடுகள் மூடப்பட்டிருக்கும். பெற்றோர் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட சாவிகளை திறந்து வீடுகளுக்குள் செல்ல வேண்டும். பெற்றொர் பராமரிப்பு குறையத் தொடங்கிய காலகட்டம் அது. சோவியத் யூனியனும் உடைபடும் காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.
Millennials: இந்த தலைமுறையினர் 1985 தொடங்கி 2000மாம் ஆண்டு வரை பிறந்தவர்கள். இவர்களுக்கு என ஒரே ஒரு சித்தாந்தம் மட்டுமே இருந்தது. முதலாளித்துவம்! சோவியத் உடைந்து பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியிருந்தது. Survival of fittest என்பதே இத்தலைமுறையின் கோஷமாக இருந்தது.
பணம் வாழ்க்கையை காட்டிலும் பிரதானமாக ஆக்கப்பட்டது. கூடவே தொழில்நுட்பமும் பெரும் பாய்ச்சலில் நிகழ்ந்த நம்மை மிகவும் தனியாக்கி இருக்கிறது. முந்தைய தலைமுறையேனும் தாழிடப்பட்ட தலைமுறையாக இருந்து திறப்பதற்கு சாவி கைகளில் இருந்தது. இந்த தலைமுறை நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. சாவியே இல்லை.
இத்தகைய பின்புலங்களை புரிந்து கொண்டால் தலைமுறைகளுக்கு இடையிலான புரிதல் இடைவெளியைக் குறைக்க முடியலாம்.