தனிமை என்பதுதான் என்ன?
தனிமை என்பது மனிதனின் உயிர்க்கூறு.
தனிமை என்பது தனியாக இருத்தல் அல்ல. கூட்டமாக இருந்தாலும் தனியாக உணர்வதே தனிமை!
யாருடைய பிரத்யேக கவனமும் நமக்கு கிடைக்கவில்லை என்பதே தனிமைக்கான உளக்கூறு. அதனால்தான் காதலிக்கிறோம். காதலித்ததும் தனிமை போய்விடும் என நினைக்கிறோம். கிடையாது. அதிகபட்சம் தனிமை குறைக்கப்படலாம். பிரத்யேக கவனம் ஓரளவுக்கேனும் கிட்டிடத்தான் காதல், உறவு ஆகியவை எல்லாம். ஓரளவுக்கு கிட்டவும் செய்கின்றன. ஆனால் அவர்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது. கடிகார முள்ளுக்கு பின்னும் பணத்துக்கு பின்னும் ஓடும் வாழ்க்கை அவர்களையும் இழுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த வாழ்க்கையையும் அதற்கான காரணங்களையும் களையாமல் நாம் தனிமையை களைய முடியாது.
பழங்குடியினனுக்கு தனிமையை பற்றியக் கவலை இருந்திருக்குமா? அவனுக்கு அடுத்தவனின் முக்கியத்துவம் தெரியும். ஆகவே இருந்திருக்காது. இயற்கையைப் பற்றிய பயமும் நம்பிக்கைகளும் வேண்டுமானால் இருக்கும்.
நவீன மனிதன் குழு வாழ்க்கையில் இருந்து விலகிக் கொண்டே இருக்கிறான். அவனுக்கு ஆதாயம் தரும் நுகர்வு வாழ்வும் தன்முனைப்பு அடையாள தேடலும் அவனிடம் ஒரு மிகப்பெரிய பற்றாக்குறையை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த பற்றாக்குறையை அவன் நொந்து கொண்டே விரும்பவும் தொடங்கி விடுகிறான்.
பல நேரங்களில் குழு வாழ்வியல் பலருக்கு இடைஞ்சலாக தோன்றுவதுண்டு. பலரும் தங்களின் கண்ணீரை தனக்குள்ளேயே தேக்கி வைத்துக் கொள்வதுண்டு. அது அவர்களின் பற்றாக்குறையை அதிகரிக்கவே செய்யும். விளைவாக நிறைய தாழ்வு மனப்பான்மை, அவநம்பிக்கை, கழிவிரக்கம் என எக்கச்சக்கத்துக்கு நம்மை நாமே வதைப்பதற்கு ஆயுதங்கள் உருவாக்கிக் கொள்கிறோம்.
காதலிக்கலாமா வேண்டாமா?
கற்பு, குடும்பம் என்பது போல் காதலும் ஒரு taboo-வாக்கப்பட்டுள்ளது என்றுதான் சொல்கிறேன். இங்கு காதல் என்பதாக உங்களுக்கு எதுவெல்லாம் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதோ அது எதுவுமே காதல் கிடையாது. உங்களுக்கான காதல் உங்களுக்கான மனக்கோப்பைக்கு ஏற்றபடிதான் இருக்கும்.
முதலில் காதலியுங்கள். பிறகு பிரியுங்கள். பெண்ணை/ஆணை தெரிந்து கொள்ளுங்கள். பிறகு காதலியுங்கள். பிரியுங்கள். அகங்காரத்தை கழற்றி விடுங்கள். பிறகு காதலியுங்கள். பிரியுங்கள். முன்முடிவுகளை தூர எறியுங்கள். பிறகு காதலியுங்கள். பிரியுங்கள். தனிமையை ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு காதலியுங்கள். என்ன செய்வது என முடிவெடுங்கள்.
காதல் மட்டுமே உணர்தலை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். Love is the emotion where you get yourself introspected. அந்த காதல்தான் தன்னலமற்று ஆகும்போது அகநோக்கிலிருந்து புறநோக்குக்கு மாறும். அங்கிருந்துதான் தனிமை மறுப்பதற்கான உண்மையான வாழ்க்கை முறைக்கு செல்ல தொடங்குவோம்.
தனிமை என்னும் உயிர்க்கூறை சமூகக்கூறாக்கித்தான் களைய முடியும். அப்படியல்லாமல் தன்னளவிலேயே களைவதற்கு ஒரு மிகப்பெரிய விழிப்பணர்வு வேண்டும்.
தனிமை என்ற உயிர்க்கூறை காதலால் மட்டும்தான் சமூகக்கூறாக்க முடியும். அதிலிருந்துதான் காதல் என்னவென்பதை நீங்கள் உணர முடியும். தனிமை என்பதை வெற்று ஆபரணமாக ஆக்கிக் கொள்ளவும் முடியும்.
தனிமை போற்றும் சமூக உறவுகளை களைவதற்கு காதலே அடித்தளம்.
தனிமையை ஏற்று தனிமையில் இருந்து விடுபெறுங்கள்.