எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் பெற்ற வெற்றியை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்போது உதவியாளர் வந்து, “ஐயா... தங்களைப் பார்க்க ஒருங்கிணைப்பாளர் வந்து கொண்டிருக்கிறார்’’ - எனக் கூறுகிறார்!
- பழனிச்சாமியுடன் இருந்த, சி.வி.சண்முகம், “யாரையா ஒருங்கிணைப்பாளர்... அதெல்லாம் பழைய கதை... அவர் இப்ப பொருழாளர்தான்’’ என்று நாக்குழற உச்சரிக்க... உடனிருந்தவர்கள் சிரிக்க, அவர்களை அமைதிப்படுத்தி விட்டு பன்னீர்செல்வத்தை சந்திக்க பழனிச்சாமி வெளியே செல்கிறார்!
பழனிச்சாமி:-
வாங்கண்ண; என்ன இவ்வளவு தூரம்! சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே?
பன்னீர்:-
இப்படிப் பேச்சிலே தேன்தடவி பேசி என்னை நம்பவைத்து நாசமாக்கியது போதாதா? இன்னும் என்ன செய்யப் போகிறீர்கள்?
பழனிச்சாமி:-
கோபப்படாதீங்க... சாந்தமா பேசுங்க... எல்லாம் ஒண்ணா இருந்து அம்மா ஆட்சியை அமைப்போம்!
பன்னீர்:-
இப்படி சொல்லி, கத்தியிலே வெண்ணையை தடவி கழுத்தறுப்பது போல என்னை கை கழுவி விட்டாய்!
பழனிச்சாமி:-
என்ன சொல்றீங்க அண்ணே! எல்லாமே நீங்களா தேடிகிட்ட முடிவுதானே! நானா உங்களை தர்மயுத்தம் செய்யச் சொன்னேன்? துக்ளக் குருமூர்த்தி, அவர் சொல்லிதான் நீங்க தர்மயுத்தம் நடத்தினதா சொன்னாரு; அவர்மேலே பாய வேண்டிய பாய்ச்சலை என்மீது ஏன் பாயறீங்க...? எடுப்பார் கைப்பிள்ளை! என்பார்களே அப்படி மாறி இப்ப இருந்ததெல்லாம் இழந்து நிற்கிறீங்க... அதுக்கு நான் என்ன செய்வது?
பன்னீர்:-
உன் காட்டுல இப்ப மழை பெய்யுது; அதனால பேசுற... இந்த மழை நீடிக்காது; ஒருநாள் மழை நிற்கும்... உன் குளமும் வற்றும்; அற்ற குளத்து அறுநீர்ப்பறவைப் போல உன்னைச் சுற்றியுள்ள கூட்டமும் ஒருநாள் பறந்து போகும்!
பழனிச்சாமி:-
என்ன சாபமா?
பன்னீர்:-
சாபமில்லை; அனுபவம்!
பழனிச்சாமி:-
என்ன கூற வருகிறீர்கள்?
பன்னீர்:-
உன்னைச் சுற்றியுள்ள இதேகூட்டம் அம்மா மறைந்தபின் என்ன செய்தது; எண்ணிப் பார்! இன்று உனக்காக செய்தியாளர்களை சந்தித்து வழவழவென சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறிவாதிட்டுக் கொண்டிருக்கும் பேர்வழி ஒரு காலத்தில், போயஸ் கார்டன் முன் நள்ளிரவில் நின்றுகொண்டு, நாகுளற, வாய்திணற நிலை தடுமாறிய நிலையில் “சின்னம்மா... நீங்கதான் இனி அம்மா... நீங்கதான் எங்களைக் காப்பாத்தனும்’’ என்று சபதமிட்டது நினைவில்லையா? “அழியாத கோலம்’’ போல அந்த அலங்கோலப் பேச்சு இன்றும் ‘யூ டியூப்’பில் உள்ளதே!
பழனிச்சாமி:-
நான் கூடதான் சாஷ்டாங்கமாக வீழ்ந்து - ஊர்ந்து சென்று சசிகலா காலைத் தேடிப்பிடித்து வணங்கினேன்! வணங்கிய காலை இன்று வாரவில்லையா? இதெல்லாம் கவுண்டமணி காமெடி போல நம்ப அரசியலிலே சகஜமா போச்சு... பழைய சாக்கடைகளை கிளறாதீர்கள்; இப்ப எதுக்கு இங்க வந்தீங்க...
பன்னீர்:-
“தர்மத்தின் வாழ்வை சூதுகவ்வும்.... தர்மம் மீண்டும் வெல்லும்’’ என்பதை உனக்கு நினைவுபடுத்தி விட்டுப்போக வந்தேன்.
பழனிச்சாமி:-
‘ஹஹஹா.... ஓகோ கோ’. (என சிரிக்கிறார்...)
பன்னீர்:-
ஏன் சிரிக்கிறாய்?
பழனிச்சாமி:-
தர்மத்தைப் பற்றி நீங்கள் பேசியதைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா? ‘தர்மயுத்தம்’ என்ற பேரில் நாடகம் ஆடியவர்கள் எல்லாம் தர்மவான்கள் ஆகிவிடுவார்களா?
பன்னீர்:-
ஆட்டம் இன்னும் எத்தனை நாள் என்று பார்த்து விடுகிறேன்! டெல்லியில் எனக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்திருப்பாயே!
பழனிச்சாமி:-
டெல்லியைக் காட்டி மிரட்டாதீங்க... டெல்லியைப் பொறுத்தவரை எல்லாமே ‘நம்பர்’ விளையாட்டு தான்!
யாரிடம் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அங்கு மரியாதை. நீங்க ஆரம்பத்தில் சொன்னீங்களே, கத்தியில் வெண்ணெய் தடவி மட்டுமல்ல, நம்ப வைத்தும் கழுத்தறுப்பதில் அவர்கள் வல்லவர்கள்! கடந்த கால நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் அதனைக் கற்றுக் கொள்ளவில்லையா?
சரி... சரி... வந்த விஷயத்தை விட்டு எங்கேயோ போய் விட்டோம்! இப்போது எதற்காக வந்தீர்கள்?
( பன்னீர் ஏதோ பதில் சொல்லவர, உள்ளே யாரோ தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலித்த பாடலை சப்தத்துடன் வைக்க, நமக்கு பன்னீர், பழனிச்சாமி பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை. உள்ளே ஒலித்த சினிமா பாடலுக்கு இருவரும் வாயசைப்பது போலவே தோன்றியது.)
பழனிச்சாமி:-
“என்னம்மா கண்ணு சௌக்யமா?
பன்னீர்:-
ஆமாம்மா கண்ணு சௌக்யம்தான்
பழனிச்சாமி:-
யானைக்கு சின்ன பூனை போட்டியா? துணிஞ்சு மோதி தான் பட்டபாடு பாத்தியா?
பன்னீர்:-
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான். உரசிப் பாருங்க மங்கிடாத தங்கம்தான்!
பழனிச்சாமி:-
வெள்ளிப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கிடக்கு... (இந்தப் பாடல் வரிகள் ஒலிக்கும் போதே திடீரென உள்ளே டி.வியை நிறுத்தி விடுகிறார்கள்.)
பன்னீர்:-
காசைக் காண்பித்து நிர்வாகிகளை வாங்கிவிடலாம். ஆனா தொண்டர்கள் என்பக்கம், நீயா, நானா பார்த்து விடுகிறேன் என்று கூறிச் செல்லவே வந்தேன்!
வேகமாக வெளியேறிய பன்னீர், பழனிச்சாமி வீட்டுக்கு வெளியே வருகிறார். காரில் ஏறுகிறார். அங்கே காத்திருந்த வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் அவருடன் காரில் ஏறிக்கொள்ள கார் ஜெயலலிதா சமாதிக்குச் செல்கிறது. ஆத்திரத்துடன் இறங்கிய பன்னீர், ஜெயலலிதா சமாதியின் முன் இறங்கி சத்தியம் செய்ய கையை ஓங்கி சமாதி மீது அடிக்கிறார். அடி தாங்க முடியாமல் சமாதி நடுங்குகிறது.
ஜெயலலிதாவின் ஆன்மா பன்னீர் முன் தோன்றுகிறது. பன்னீர் பயபக்தியுடன் வணங்குகிறார்.
ஜெ.ஆன்மா:-
உங்க யுத்தம், அது பதவி யுத்தமோ, தர்மயுத்தமோ எதாயிருந் தாலும் உங்களுக்குள்ளேயே பார்த்துக் குங்கப்பா... ஆளுக்கு ஆள் இப்படி வந்து ‘சபதம்’ செய்கிறேன் என ‘தர்ம அடி’ தருவதை என்னால் தாங்க முடிய வில்லை! ஆள விட்டுடுங்கப்பா... - என்று அறிவித்து விட்டு ஜெ.ஆன்மா மறைந்து விடுகிறது!
‘அம்மா... அம்மா... நீங்களும் என்னை கைவிட்டுடாதீங்கம்மா... என்று பன்னீர் கதற.... அருகில் படுத்திருந்த அவரது மகன் அவரைத் தட்டி எழுப்பி, “என்னப்பா எதாவது கனவா?’’ - என்று கேட்க, “ஒன்றுமில்லையப்பா...’’ என எழுந்து அமர்ந்து அருகிலிருந்த தண்ணீரை எடுத்து குடிக்கிறார்.
மகன்:-
என்னப்பா; ஒரு மாதிரியா இருக்கீங்க.... கெட்ட கனவா?’
பன்னீர்:- ஆமாம்பா... படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது. எனது அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடு மோன்னு பயமா இருக்கு. கண்ணை மூடினால் கெட்ட கெட்ட கனவா வருது.
மகன்:-
பயப்படாதீங்கப்பா... இந்த மடம் இல்லைன்னா, சந்தை மடம்! மேலிடம் இருக்கும் போது என்ன பயம்? எல்லாத்தையும் மறந்து நிம்மதியா தூங்குங்க.
பன்னீர்:-
நம்ம கூட நாலுபேரு இருந்தாதானே மேலிடம் மதிக்கும். இருந்தவங்க எல்லாம், ஒவ்வொருத்தரா கழண்டுகிட்டு போறாங்க... அதை நினைச்சா எப்படியப்பா தூங்க முடியும்? அப்போது தூரத்தில், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது கண்ணிலே கண்டதும் கனவாய்ப் போனது... காதிலே கேட்டதும் கதைபோல் ஆனது... என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லை ஒண்ணுமே புரியலே உலகத்திலே’’ - என்று ஒலிக்கும் பாடல் காற்று வழியாக பன்னீரின் காதில் பாய்கிறது.
- சிலந்தி