திருமண விழாக்களில் நடைபெறும் களேபரங்கள் அண்மை நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் பெண் ஒருவர் திருமணம் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை காட்டிலும் அதனைக் கேட்ட மணமகன் மயங்கி விழுந்த சம்பவம்தான் பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாலியப்பல் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் வரும் ரேமு கிராமத்தில் கடந்த மே 13ம் தேதி நடந்தேறியிருக்கிறது. ஆண்மையில் தற்போதுதான் இது தொடர்பான வீடியோ வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதன்படி, ஜலேஷ்வர் போலிஸ் எல்லைக்குட்பட்ட தேவ்குமார் கிராமத்தைச் சேர்ந்த மணமகன் கடந்த மே 13 அன்று மணமகளின் ரேமு கிராமத்தில் நடைபெற இருந்த தனது திருமணத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கு திருமணத்திற்கான சடங்குகள் அனைத்தும் தடபுடலாக நடைபெற்று வந்த போது திடீரென, மணமேடையில் இருந்து எழுந்த மணமகள் அணிகலன்களை கழற்றி எரிந்துவிட்டு தனக்கு இந்த திருமணத்தை விருப்பம் இல்லை. என் விருப்பத்தை மீறி இதனை நடத்துகிறார்கள். எனக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. மீண்டும் எப்படி திருமணம் செய்துக்கொள்வது எனக் கேட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த உறவினர்கள், மணமகளின் பெற்றோர் மணப்பெண்ணை சமாதானம் செய்தும், அவரை திட்டித் தீர்த்தும், சிலர் அவரை தாக்கவும் செய்திருக்கிறார்கள். இதற்கிடையே மணமகள் திருமணம் வேண்டாம் என கூறியதால் மணமகன் மயங்கி விழுந்திருக்கிறார்.
பின்னர், மணமகனின் மயக்கத்தை தெளிய வைத்து மணமகளை திருமணம் செய்ய வைக்க எத்தனித்தபோதும் எதுவும் கைகூடாததால் மணமகன் மறுநாளே வேறு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீ போல பரவி வருகிறது.