இறுதிச்சடங்கு நிகழ்வில் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடும் காணொலி இன்ஸ்டாகிராமில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. இது இந்தியாவின் வட மாநிலத்தில் நடந்ததாக அந்த வீடியோவின் மூலம் தெரிகிறது.
பொதுவாக, இறப்பு நிகழ்வுக்கு வருவோர் அமைதியாக தங்களது அஞ்சலிகளையும் இரங்கல்களையும் தெரிவித்துவிட்டுச் செல்வதே வழக்கமாக இருக்கும்.
ஆனால் அந்த வைரல் வீடியோவில் மேடை ஒன்றில் பெண் ஒருவர் திருமணம் நிகழ்வுகளில் நடனம் ஆடுவது போல சாவகாசமாக பெல்லி டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறார். அதனை இறுதிச்சடங்குக்கு வந்தவர்களும் தவறாது கண்டு ரசித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் “இது உயிரிழந்தவரின் கடைசி அல்லது நீண்ட நாள் ஆசையாக இருந்திருக்கும்” என நெட்டிசன்கள் பலரும் கமென்ட்டில் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் சிலர் இது என்ன மாதிரியான அஞ்சலி கூட்டம்? இறுதிச்சடங்குக்கு வந்தவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? அல்லது சோகமாக இருக்கிறார்களா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.