புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றால் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
அதில், மிகப்பெரிய சுறா மீன் ஒன்று நடுக்கடலுக்கு மேல் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டரை பாய்ந்து வந்து கவ்விச் செல்கிறது. அந்த வீடியோவில் நடந்தது உண்மையான சம்பவம் என நம்பி கிரண் பேடியும் என்ன இது என கேப்ஷன் இட்டு ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் நேஷ்னல் ஜியோகிராபிக் சேனல் இந்த வீடியோவை 1 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கிரண்பேடி ஷேர் செய்த அந்த ட்வீட்தான் பெருமளவில் ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறது. ஏனெனில், அது 2017ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த 5-Headed Shark Attack என்ற படத்தில் இடம்பெற்றிருந்த கிராஃபிக் காட்சியாகும்.
எந்த படம் என்பது தெரியாவிட்டாலும் அது சினிமாவில் வரும் கிராஃபிக் காட்சி என்று கூட அறிந்திடாமல் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், போட்டோக்களை கண்மூடித்தனமாக பகிர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
முன்னதாக சூரியனில் ஓம் என்று ஒலிக்கும் ஓசையை நாசா ரெக்கார்ட் செய்திருப்பதாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோவை கடந்த 2020 ஜனவரியில் கிரண் பேடி பகிர்ந்து இணையவாசிகளின் ட்ரோலுக்கு ஆளானார்.
மேலும், முன்னாள் காவல்துறை அதிகாரியாக, ஒரு மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக இருந்தவரே இப்படி போலியான பதிவுகளை பகிர்ந்தால் சாமானிய மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் கிரண்பேடிக்கு எதிராக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பலரால் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும், “இந்த வீடியோவின் உண்மை என்னவென ஆராய வேண்டும். இருப்பினும் காண்பதற்கு பயங்கரமாகவே இருக்கிறது” என குறிப்பிட்டு மீண்டும் ஒரு ட்வீட்டை கிரண் பேடி பதிவு செய்திருக்கிறார்.
ஆனால் தவறாக பதிவிட்டதை சுட்டிக்காட்டியும் ஏற்காமல் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல’ என்ற வாக்கியம் படி மீண்டும் கிரண் பேடி பதிவிட்டிருப்பதற்கும் நெட்டிசன்கள் கிண்டலடித்திருக்கிறார்கள்.