நடிகர் சல்மான் கானைப் போலவே உருவ அமைப்புக் கொண்டவர் தான் இணைய பிரபலம் அசாம் அன்சாரி. சல்மான் கான் நகல் என்று அழைக்கப்படும் அவரை சுமார் இன்ஸ்டாகிராமில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
34 வயதான அன்சாரி, சல்மான் கானைப் போன்று சினிமா பாடல்களுக்கும், டயலாக்குகளுக்கும் ரீல்ஸ் செய்து பிரபலமடைந்தவர். இந்த நிலையில் சட்டையின்றி நடுரோட்டில் செய்த கோமாளித்தனம் அவரை சிக்கலில் சிக்க வைத்தது.
பொது இடங்களில் ரீல்ஸ் செய்வதை வேலையாக வைத்திருந்த அவர், சாலையின் நடுவே சட்டை இல்லாமல் ரீல்ஸ் செய்து நடனமாடிக் கொண்டிருந்தார். பலர் கைத்தட்டி சிரித்துக் கொண்டிருக்க, மற்ற பார்வையாளர்கள் அவரது செயலை எதிர்த்தாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு சற்று நேரம் சத்தம் அதிகமாகி, சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த போலிசார் பொதுமக்களை அமைதிப்படுத்த முயன்றுள்ளனர். அதுமட்டுமின்றி அசாமை சட்டை அணியுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதை அசாம் அன்சாரி மறுத்துள்ளார். அது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்பு அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்னர் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காகவும் அசாம் அஜ்ன்சாரி மீது, போலிஸார் 151 பிரிவுன் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து ரீல்ஸ் என்ற பெயரில் பொது இடங்களில், பொது மக்களுக்கு இடையூரை ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.