உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி உள்ள இன்றைய காலக் கட்டத்தில், சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக பேஸ்ஃபுக், அருகில் உள்ள நண்பர்கள் (Nearby Friends), வானிலை (Wearther Aalert), இருப்பிட வரலாறு (Location History), மற்றும் இன்னும் சில அம்சங்களை வழங்கி வந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாத இறுதிக்கு பிறகு இந்த சேவைகள் இனி கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
9to5Mac எனும் டெக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பேஸ்புக் அதன் லொகேஷன் சார்ந்த சேவைகளை ஜூன் மாதத்தில் நிறுத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கான சரியான காரணத்தை நிறுவனம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த அம்சங்கள் தொடர்பான அனைத்து பயனர் தகவல்களும் பேஸ்புக் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் பயனர்கள் இந்த அறிவிப்பை பேஸ்புக் மொபைல் செயலியின் மூலம் பெற்று வருகின்றனர்.
Nearby Friends என்பது மக்கள் தங்கள் தற்போதைய இருப்பிடத்தை அவர்களின் Facebook நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள அனுமதிக்கும் அம்சமாகும். வருகின்ற ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை மட்டுமே பயனர்கள் தங்கள் இருப்பிடத் தரவு மற்றும் location history ஆகியவற்றை அணுகவும், பதிவிறக்கவும் முடியும் என்று பேஸ்புக் அறிவித்தது. இந்த தேதிக்கு பிறகு, சேகரிப்பட்ட அனைத்து தரவுகளும் நிரந்தரமாக நீக்கப்படும்” என்று அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயனர் தரவு சேகரிப்பைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கையின் சரியான காரணத்தை மெட்டா நிறுவனம் வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்த நடைமுறைகள் குறித்து பல அரசுகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் நடத்திய ஆய்வு தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவிற்கு தரவுகளை பகிர்வதற்கு அனுமதிக்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அகற்றப்படும் என்று இந்த ஆண்டு பிப்ரவரியில் மெட்டா நிறுவனம் மிரட்டியது.
இந்த தரவு பரிமாற்றங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் ஸ்னூப்பிங்கிலிருந்து பயனர்களைப் பாதுகாக்கவில்லை என்று கண்டறியப்பட்டது. பின்பு ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு, நாடு கடந்த தரவு பரிமாற்றத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் சேவைகள் சட்டத்திற்கான விவரங்களை இறுதி செய்துள்ளது. இந்த விவரங்கள், பேஸ்புக், கூகுள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பயனர்களின் டேட்டாக்களை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.