புதுப்புது வகையான உணவுகளை உண்பதற்காக டிராவலர்களும், உணவு பிரியர்களும் பல பகுதிகளுக்கு பயணப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
நிறைய பகுதிகளுக்கு சென்று பல வகையான உணவுகளை எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியத்தையும் கைவிடாமல் பேணிக்காப்பதும் தொடர்கிறது.
இருப்பினும் உணவு பிரியர்களை திருப்திப்படுத்துவதன் பேரில் புதுமையான உணவுகளை தயாரிக்கிறோம், சவால்களை அறிமுகம் செய்கிறோம் என பல உணவகங்களும், தெருவோர கடைகளிலும் ஆரோக்கியமில்லாத, உணவு பிரியர்களையே முகம் சுழிக்க வைக்கும் வகையிலான பண்டங்களை தயாரித்து அதனை சமூக வலைதளங்கள் வாயிலாக வைரலாக்கி வரும் நிகழ்வும் ஒருசேர தொடர்ந்து நடைபெறுகிறது.
அவ்வகையில், தெற்கு டெல்லியின் லாஜ்புத் நகர் பகுதியில் தென்னிந்தியாவின் பிரபல காலை உணவான இட்லி சட்னி சாம்பாரை வைத்து ரோல் ஐஸ் க்ரீம் செய்யும் வீடியோதான் நெட்டிசன்களை அதிர்ச்சியடையவும், முகம் சுழிக்கவும் வைத்திருக்கிறது.
அதில், இட்லியை கொத்து பரோட்டா போன்று நொறுக்கி, அதன் மீது தேங்காய் சட்னி மற்றும் சாம்பாரை ஊற்றி பிசைந்து அதை ஐஸ்க்ரீமாக்கி அதன் மீது மீண்டும் சாம்பாரையும், சட்னியையும் அலங்காரத்திற்கு ஊற்றி கொடுக்கிறார்கள்.
இதனைக்கண்ட நெட்டிசன்கள், எப்படியாவது அந்த வீடியோவை காணாதது போன்று இருக்க வேண்டும் என பதிவுட்டு வருகிறார்கள்.