கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்பு மீட்பர் வாவா சுரேஷ். இவர் சமீபத்தில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பை பிடிக்கும்போது, பாம்பால் கடிபட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அந்தச் அதிர்ச்சி தணிவதற்குள் கர்நாடகா மாநிலத்தில் பாம்பு மீட்பர் ஒருவரை பாம்பு தீண்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் மாஸ் சயீத். இவர் சிறுவயதிலிருந்து பாம்பு மீட்பராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், 3 நாகப் பாம்புகளை பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பாம்புகள் தலையை உயர்த்தி ஆக்ரோஷத்துடன் நின்றுகொண்டிருக்க, மாஸ் சயீத் அலட்சியமாக செயல்பட்டுள்ளார். அப்போது அதில் ஒரு பாம்பு சட்டென்று மாஸ் சயீத்தின் கால் மூட்டு பகுதியில் கடித்தது.
இதில் அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கேயே மயக்க நிலைக்குச் சென்ற மாஸ் சயீத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாஸ் சயீத் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.