ஃபரீதாபாத் நகரம் ஒரே வாரத்தில் ஊடகங்களால் அதிகம் பேசப்பட்ட பகுதி. அதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் அட்டகாசங்கள்தான். தலைநகர் டெல்லி அருகே உள்ள ஹரியானா மாநிலத்தில் ஃபரீதாபாத் நகரம் உள்ளது. நடுத்தர மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதிகளில் அடிக்கடி பகீர் கிளப்பும் வைரல் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
அந்தவகையில், கடந்த வாரம் ஃபரிதாபாத்தில் அப்பகுதியில் உள்ள 10-வது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுக்குமாடி கட்டடத்தின் 9வது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க, தாய் ஒருவர் தனது மகனை பெட்ஷீட்டில் கட்டி 9வது மாடியின் பால்கனிக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து மகனுடன் பெட்ஷீட்டை இழுத்துள்ளனர். சிறுவன் பெட்ஷீட்டை பிடித்துக்கொண்டு தொங்கும் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்தப் பெண் மன்னிப்புக் கோரினார்.
இந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் அடுத்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரீதாபாத் நகரில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் ஒருவர், ஆபத்தான பகுதியில் நின்றுகொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவை எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசி வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் 12வது மாடியின் பால்கனியின் வெளிப்பகுதியில் நின்றுக்கொண்டு, உடற்பயிற்சி செய்வது போல, Push Up செய்யும் அந்த நபர் மீண்டும் சிறிது நேரத்தில், மேலே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.