தனது கனவு நிறைவேறுமா நிறைவேறாதா என்ற யோசனையிலேயே பெரும்பாலானோர் அதனை அப்படியே விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்த்து கடந்துச் செல்வது இயல்பானதாக இருக்கும்.
ஆனால் 8 வயதில் தான் கொண்ட ஆசையை கனவை 88 வயதில் ஒருவர் நிறைவேற்றியிருக்கிறார் எனக் கூறினால் அது மிகையாகாது.
ஆம். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயியான தேவராஜன் என்ற 88 வயதான முதியவர் தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக வாழ்நாளின் மொத்த நாளையும் செலவிட்டிருக்கிறார். பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்பதே தேவராஜின் அதிகபட்ச கனவாக இருந்திருக்கிறது.
தற்போதைய தவணை முறை காலகட்டத்தில் ப்ரீமியம் கார் வகைகளில் உள்ள பென்ஸ் காரை வாங்குவதில் பெரிதும் கஷ்டம் இருக்காது. ஆனால் 88 வயது முதியவர் தன்னுடைய 8 வயதில் பென்ஸ் காரை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த கனவை கைவிடாமல் இருப்பது ஆச்சர்யமளிக்கக் கூடியவைதான்.
1930ல் தேவராஜன் தன்னுடைய 8 வயதில் இருக்கும் போது சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவரது கண்ணுக்கு பென்ஸ் கார் ஒன்றினை கண்டிருக்கிறார். காரை விட பென்ஸ் LOGO அவருக்கு மிகவும் பிடித்தமானதாக போயிருக்கிறது.
ஆனால் அதன் பிறகு படிப்பு, திருமணம், 5 குழந்தைகள் என வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்குச் சென்றதால் அவருக்கு தனது கனவான பென்ஸ் காரை வாங்கும் நாள் வாய்க்காமலேயே போயிருக்கிறது.
இருப்பினும் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்ற லட்சியத்தை விடாமல் தன் வாழ்நாளை இதுகாறும் கடத்தியிருக்கிறார் தேவராஜன். இப்படி இருக்கையில், தனது கடமைகள் அனைத்தையும் முடித்த விவசாயியான தேவராஜன் 88வது வயதில் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான B-Class ரக வெள்ளை நிற மெர்சிடெஸ் பென்ஸ் காரை வாங்கி தனதாக்கியிருக்கிறார் தேவராஜன். சென்னையில் உள்ள ஷோரூமில்தான் தேவராஜன் பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார்.
முதியவரை எண்ணைத்தை அறிந்த ஷோரூம் ஊழியர்கள் அவரது கனவு நிறைவேறியது கொண்டாடும் வகையில் கேக் வெட்டி சிறப்பித்திருக்கிறார்கள்.
பிடித்தமான காரில் மனைவி மக்களுடன் புன்னகையுடன் ஏறிச் சென்றார் தேவராஜன். அந்த பூரிப்பு நிறைந்த காட்சிகளை பதிவு செய்து வீடியோவாக யூடியூபிலும் பதிவிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவுக்கு 35 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றிருக்கிறது.
நெஞ்சம் நிறைந்த இந்த நெகிழ்ச்சி நிகழ்வு 2018ம் ஆண்டு நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.