பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றின், குழந்தைகள் மட்டும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோவில், மோடி அரசு செயல்படுத்திய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மறைமுகமாக கலாய்த்து, சிறுவர்கள் பெர்ஃபார்ம் செய்தனர்.
அதில் ஒரு சிறுவன், வடிவேலுவின் ‘இம்சை அரசன்’ போல வேடமிட்டு, அவரது உடல்பாவனைகளுடன் பேசினான். இந்த நாடகத்தில் இரு சிறுவர்களும் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவரது பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்திருந்தனர்.
சிறுவர்களின் இந்த நகைச்சுவை நாடகம் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் வைரலாக பரவி வந்தாலும், பா.ஜ.க ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியைக் கிளப்பியது.
இதுகுறித்து பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை, “ரியாலிட்டி டி.வி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பதுபோல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணை அமைச்சர் முருகன் கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்” என ட்வீட் செய்தார்.
இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் “முட்டாள் மன்னன் என்றால் உங்களுக்கு ஏன் மோடி நினைவுக்கு வருகிறார்” என பா.ஜ.கவினரையும் அண்ணாமலையையும் கிண்டல் செய்து பதிவிட்டனர். இதையொட்டி #BJPvsLKG, #பால்வாடி_பாஜக ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.
சிறுவர்களின் இந்த நாடகம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. சிறுவர்களின் உரையாடல் ஆங்கில மொழியாக்கத்தோடு பரவி வருவதால் தமிழ் தெரியாதவர்களும் கூட ரசித்துப் பகிர்ந்து வருகின்றனர்.
இதன் மூலம் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் தாமே தேடிப்போய் ஆப்பை வாங்கிக் கொண்டுள்ளதாக பலரும் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.