நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதற்கிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பின்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஆசிரியைக்கே பாடம் எடுத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தியாவின் தேசிய மொழி என்ன என்பது குறித்து, பல சர்ச்சைகளும், அதையொட்டிய விவாதங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இந்தி திணிப்பு முயற்சியை முன்னெடுக்கும் பலரும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்தி தேசிய மொழி எனும் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தி தேசிய மொழி அல்ல என்றும், இந்தியாவில் தேசிய மொழி என எதுவும் இல்லை என்றும் அலுவல்பூர்வ மொழி என்பதே நடைமுறையில் உள்ளதென்றும் பல முறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், ‘இந்தி தேசிய மொழி’ என்ற தவறான தகவல் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு ஒன்றில் இந்தி தேசிய மொழி என்று கூறிய ஆசிரியரிடம் இந்தியாவில் தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று மழலை மொழியில் குழந்தை தெரிவித்தது வைரலாகி வருகிறது.
ஆன்லைன் வகுப்பில் ஆசிரியை பாடம் எடுத்து கொண்டிருக்கும்போது, நமது தேசிய மொழி இந்தி என்று சொல்கிறார். வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த கேத்தரின் என்ற சிறுமி, இதைப் பற்றி கருத்து சொல்லட்டுமா என்று ஆசிரியையிடம் அனுமதி கேட்டுவிட்டு, "இந்தியாவிற்கு தேசிய மொழியே கிடையாதே" என்கிறார்.
இதைகேட்ட ஆசிரியை, “வெரிகுட் கேத்தரின்” எனச் சிறுமியை பாராட்டுகிறார். ஆசிரியைக்கே பாடம் நடத்திய இந்தக் குழந்தையின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.