சந்தையில் பொருட்களை விற்பதற்காக முக்கியமாக கருதப்படுவது விளம்பரங்கள்தான். அப்படி உருவாகக் கூடிய சில விளம்பரங்கள் உணர்வுப்பூர்வமானதாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். சில விளம்பரங்கள் முகத்தை சுழிக்கவும் செய்கின்றன.
இப்படி இருக்கையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு ஷெர்வானி வியாபாரம் குறித்த விளம்பர போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி கலக்கி வருகிறது.
நாளிதழ்களில் வெளியாகியுள்ள அந்த விளம்பர போஸ்டரில், மணமகன் ஒருவர் காணாமல் போய்விட்டது போல சித்தரிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில், “24 வயதுடைய அழகான, உயரமான எங்களது மகன் மஜ்னுவை காணவில்லை. உன்னை காணாமல் அனைவரும் சோகத்தில் இருக்கிறோம்.
உன்னுடைய இரண்டு கோரிக்கைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். லைலாதான் உனக்கு மணமகள். திருமணத்துக்கான ஷெர்வானியும் சுல்தான் - தி கிங் ஆஃப் ஷெர்வானி கடையில் இருந்தே வாங்கிக்கொள்ளலாம். அதுவும் நியூ மார்க்கெட் கிளையில் உள்ள சுல்தான் கடைக்கே செல்வோம்.
அங்கு கார் பார்க்கிங் வசதியும் உள்ளது. அதுபோக திருமணத்துக்கு நமது குடும்பத்தினர் நெருங்கிய நண்பர்களுக்கும் சுல்தான் கடையிலேயே குர்த்தா வாங்கிக் கொடுக்கலாம்.” இவ்வாறு குறிப்பிட்டு கடையின் விலாசம், மொபைல் எண், ஃபேஸ்புக் முகவரியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே மணமகன் காணாமல் போனது தொடர்பன போஸ்டராகவே முதலில் பார்க்கப்பட்டதாகவே பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விளம்பர போஸ்டர் தற்போது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.