பிறந்தநாள், திருமணம் போன்ற கொண்டாட்ட நாட்களில் வித்தியாசமாக செய்வதாக நினைத்து கத்தியால் கேக்கை வெட்டுவது போன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிகழ்வு அண்மைக்காலங்களாக நடைபெற்று வருகிறது.
மேலும் சர்வசாதாரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் உரிமம் இல்லாத துப்பாக்கிகளால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவதால் பல அப்பாவிகள் பாதிக்கப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும் வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில் டெல்லியை அடுத்த காசியாபாத் பகுதியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது விபரீதமாகியுள்ளது.
மணமேடையில் இருக்கும் மணப்பெண்ணும், மணமகனும் இணைந்து துப்பாக்கியை எடுத்து வான் நோக்கி இருமுறை சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவர்களது செயலை வரவேற்கும் விதமாக கூச்சலிட்டிருக்கிறார்கள்.
இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலானதை அடுத்து டெல்லி போலிஸ் மணமக்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.