ஜப்பானில் ஒரு விநோதம் இருக்கிறது.
அந்த நாட்டின் பல இளைஞர்கள் தனிமையில் வாழ்வதைத்தான் விரும்புகிறார்கள். எந்தளவுக்கு ஜப்பானில் தனித்திருத்தல் அதிகமாக உள்ளது என்பதற்கு உதாரணம் அத்தகைய வாழ்க்கைக்கு ஒரு பெயரே அவர்களின் மொழியில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.
ஹிக்கிகோமோரி!
ஜப்பானிய மொழியில் ஹிக்கிகோமாரி என்றால் சமூகத்திலிருந்து பின் வாங்கிக் கொள்வது என அர்த்தம். அச்சமூகத்தின் பொதுவெளியில் இயங்க விரும்பாமல் தங்களின் தனிமைகளுக்குள்ளேயே புதைந்து கொள்பவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். தனிமையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கிறார்கள்.
அனைவருடனும் புழங்க வேண்டுமென்பதே சமூகத்துக்கான அடிப்படை. யார் தனிமையிலிருந்தாலும் இளையோரால் இருக்க முடியாது. உலகைத் தேடிப் பயணிக்கும் ஆர்வம் எவரைக் காட்டிலும் இளைஞர்களுக்கே அதிகம் இருக்கும். ஆனாலும் ஜப்பானில் இளைஞர்கள் தனிமையை தேர்ந்தெடுக்கிறார்கள் எனில் அது வாழ்தலின் முரண்.
ஏன் தனிமையை விரும்புகிறார்கள்?
படிப்பை நிறுத்தியதிலிருந்து பிரச்சினை தொடங்கியதாக ஒருவர் சொல்கிறார்.
“என்னை நானே வெறுக்க ஆரம்பிச்சேன். பள்ளிக்கூடத்துக்கு போகாததால என் பெற்றோரும் என்னை திட்டிக்கிட்டே இருந்தாங்க. அழுத்தம் வளர ஆரம்பிச்சுது. மெல்ல மெல்ல வெளியே போறதுக்கே நான் பயப்படத் தொடங்கினேன். மனிதர்களை சந்திக்கவே பயமா இருந்தது. பிறகு என்னால வீட்டை விட்டே வெளியே போக முடியலை!”
அந்த இளைஞருக்கு வீடே சிறையானது. நண்பர்களுடன் கொண்டிருந்த தொடர்பு எல்லாமும் தொலைந்து போனது. உச்சக்கட்டமாக பெற்றோருடனான தொடர்பையும் குறைத்துக் கொண்டார். பெற்றோரை பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவில் விழித்திருக்கிறார்.
“எனக்குள்ள எல்லா விதமான எதிர்மறை சிந்தனைகளும் இருக்கு. வெளியே போகணும்ங்கற ஆசை, சமூகத்தின் மீது கோபம், பெற்றோர் மீது கோபம், இப்படியொரு நிலை இருக்கறதால ஏற்படுற சோகம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்கிற பயம், சராசரி வாழ்க்கை வாழ முடியும் மக்கள் மீது பொறாமைனு பல எதிர்மறை சிந்தனைகள்”
அந்த இளைஞர் சமூகத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். ஹிக்கிக்கொமொரி ஆக மாறிவிட்டார்.
ஒரு நாட்டில் பத்து லட்சம் பேர் அந்த நாட்டின் எந்தவொரு பிணைப்புக்கு உடன்படாமல் இருக்கிறார்கள். அச்சமூகத்தின் எங்குமே கலந்து கொள்ள வேண்டாம் என்கிற முடிவுடன் இருக்கிறார்கள். மொத்த வாழ்க்கையையுமே ஓர் அறைக்குள் தனிமையில் கழித்துவிட விரும்புகிறார்கள். அரிதிலும் அரிதாக கிடைத்த பிறப்பை ஓர் அறைக்குள் முடக்குமளவுக்கு அவர்களை கொண்டு சென்றது எது?
ஏன் சமூகத்திலிருந்து விலகியிருப்பதை விரும்புகிறார்கள்?
ஜப்பானிய நாட்டில் ஓர் இளைஞனை தனிமைப்படுத்தும் சமூகக் காரணிகள் சில இருக்கின்றன.
முதல் காரணியை செகெந்தெய் என ஜப்பானிய மொழியில் குறிப்பிடுகிறார்கள். செகெந்தெய் என்பதை அடிப்படையில் இப்படி விளக்கலாம்: ’சமூகத்தில் ஒருவனுக்கான அங்கீகாரம். பிறரை ஈர்க்கும் வகையில் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென ஒருவன் மீது விழுகிற அழுத்தம்.’ ஹிக்கிக்கொமொரியாக ஒருவர் சமூகத்திலிருந்து விலகி தனிமையில் இருக்கையில், சமூக ரீதியாக அங்கீகாரம் பெறுவதில் தோற்றுப் போய்விட்டதாக அவர் நம்பத் தொடங்குகிறார். தன்னகத்தே அவர் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச சுயமரியாதையும் நம்பிக்கையும் கூட தொலைந்து போகிறது. வீட்டுக்கு வெளியே போக வேண்டும் என்கிற எண்ணமே பீதியை உருவாக்கும் விஷயமாக மாறிவிடுகிறது.
செகெந்தெய் போல இரண்டாவது விஷயம் ஒன்றும் இருக்கிறது.
ஜப்பானிய மொழியில் அமெ என்கிறார்கள். சார்ந்திருப்பது என மொழிபெயர்க்கலாம். ஜப்பானிய குடும்ப உறவுகள் பெரும்பாலான ஆசியச் சமூகங்களின் குடும்ப உறவுகள் போலத்தான். பெண்கள் திருமணமாகும் வரை குடும்பங்களுடன் இருப்பார்கள். திருமணம் முடிந்த பிறகு வேறு குடும்பத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால் ஆண்கள் எப்போதுமே அவர்களின் வீடுகளில்தான் இருப்பார்கள். கல்யாணம் ஆனாலும் அதே குடும்பத்தில்தான். ஆதலால் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை. அதனாலேயே பல ஹிக்கிகொமொரி குடும்பங்களிலேயே தேங்கி விடுகிறார்கள். பல ஆண்டுகாலமாக குழந்தைகளை பார்த்து கொண்டதற்கு பதிலாக கடைசிக் காலத்தில் தங்களை மகன் பார்த்துக் கொள்வான் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அவன் ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதும் அவசியமாகிறது. அது அவனது சமூகக் கடமையாகவும் அதனாலேயே மாறியும் போகிறது.
ஜப்பானை விடுங்கள். நம்மூர்களையே எடுத்துக் கொள்வோம்.
நம் வீடுகளில் இருக்கும் இளையோரில் எத்தனை பேர் குழு வாழ்க்கையை விரும்புகின்றனர்?
அவர்களுக்கென ஒரு வாழ்க்கையைக் கனவு காண்கின்றனர். அந்த வாழ்க்கையில் அவர்களின் குடும்பமே, நண்பர்களோ, பிற மக்களோ பிரதானமாக இருப்பதில்லை. அவர்கள் மட்டுமே பிரதானமாக இருக்கிறார்கள். அவர்களின் சந்தோஷம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. அவர்களின் சந்தோஷத்துக்கும் வாழ்க்கைக்கும் அவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், சுற்றியிருக்கும் எத்தனை பேரை பாதிக்கிறது என்பதை பற்றி துளி கூட யோசனை இருப்பதில்லை. மிகக் குறைந்தபட்சமாக வீட்டில் இருக்கும் நபர்களுடன் பேசுவது கூட இல்லை. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன்கள், கணிணிகள், தொலைக்காட்சிகள் என வீடுகளுக்குள்ளேயே நாம் அனைவரும் தனிமைப்படும் வழிமுறைகள் நிறைய இருக்கின்றன.
தனித்தனியே இருக்கிறோம். தத்தம் விருப்பங்களுக்காக வாழ்கிறோம்.
இன்றையச் சூழலில் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள், தேர்ந்தெடுக்கும் வாழ்க்கைகள், கொள்கிற விருப்பங்கள் யாவும் நம்மையும் நம்மை சார்ந்து மட்டுமே இருக்கின்றன. எனவே பிற மனிதர்களின் அவசியம் இல்லாமல் போகிறது. எனவே உலகம் முழுவதும் இன்றைய மனிதர்கள் ஹிக்கிக்கோமரியாகதான் இருக்கிறார்கள்.
யோசித்துப் பாருங்கள். நீங்களும் கூடத்தான்!