தேஜாவூ என ஒரு வார்த்தை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் இருக்கும் சூழல் ஏற்கனவே பரிச்சயப்பட்ட சூழல் போன்ற ஓர் உணர்வு திடுமென ஏற்படும். அந்த உணர்வுக்கு பெயர்தான் தேஜாவூ.
தேஜாவூ என்ற வார்த்தை பிரஞ்சு மொழி வார்த்தை. ‘ஏற்கனவே பார்த்தது’ என்பது அதன் அர்த்தம். சில கணங்கள் மட்டுமே நீடிக்கும் அனுபவம். தோன்றும் எண்ணம்!
ஒவ்வொரு நொடி அவிழ்க்கும் சம்பவமும் உங்களுக்கு தெரிந்ததாகவே இருந்தால் எப்படி இருக்கும்?
ஒரு விஷயத்தை என்னவாக புரிந்துகொள்வதென தெரியாத போதுதான் பல விஷயங்களாக அதை மக்கள் கற்பனை செய்து கொள்கிறார்கள். தேஜா வூ என்ற நிலையை பெரும்பாலான மக்கள் பூர்வ ஜென்ம நினைவாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், அது ஒரு அரைகுறையான நினைவு எனவும் சொல்லப்படுகிறது. என்றோ நடந்த சம்பவம், இப்பிறவியிலோ முப்பிறவியிலோ, அதன் முழுமை பெறாத நினைவால் இத்தகைய உணர்ச்சி ஏற்படலாம் எனவொரு வாதம். மற்றொரு வாதமும் இருக்கிறது. கனவுகள்! ஏதோவொரு இரவில், ஆழ்ந்த உறக்கத்தில் உதிக்கும் ஒரு கனவு கொண்டிருக்கும் சூழலை திரும்ப நிஜத்தில் சந்திக்கும் போது தேஜா வூ தோன்றக்கூடும் என ஒரு தரப்பு. அதாவது எதிர்காலத்தில் நடக்கப் போகும் சம்பவங்களையும் அதன் சூழல்களையும் முன் யூகிக்கும் சக்தி கொண்டு அது மனதில் பதிந்து நாம் உறங்குகையில் கனவாக உருவாக்கிக் கொடுப்பதாக சொல்லப்படும் நம்பிக்கை.
உண்மை என்ன?
மூளைக்குள் ஒரு நொடியேனும் சென்று பார்க்க முடிந்தால் உலகம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளின் பேரபத்தம் விளங்கிவிடும். நம் உடல் கொள்ளும் எல்லா அனுபவங்களையும் பிரித்து ஆராய்ந்து அர்த்தப்படுத்தும் நிலையம் மூளை. அந்த அனுபவங்களை உடலிலிருந்து மூளைக்கு எடுத்து செல்ல நியூரான்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு புதிய தகவலும் மூளைக்குள் நியூரான்களின் வழி, தரவுகளாக சேமிக்கப்படுகிறது. சேமிப்பே நினைவுகளாகின்றன.
புதிய அனுபவம் ஒன்றை நம் புலனுணர்ச்சி உணர்கையில் நியூரான்கள் அவற்றை தமக்குள் பதிந்து மூளையின் அறைகளுக்கு சென்று நினைவுகளுக்குள் தேடி பார்க்கின்றன. நினைவுகளில் ஏதும் கிடைக்கவில்லை என்றால், அந்த அனுபவம் புதிய நினைவாக சேமிக்கப்படுகிறது. பழைய நினைவு ஒன்று கிடைத்துவிட்டால், அதோடு சேர்த்து கிடைத்த அனுபவம் சேமிக்கப்படுகிறது.
உதாரணமாக உங்களை ஒருவர் திட்டுகிறார் எனில், அந்த ஒலி காது என்ற புலனின் வழி சென்று மூளையை அடைகிறது. மொழி என்ற வளாகத்துக்குள் புகுந்து ஆராய்ந்து வார்த்தையை அடையாளம் காணுகிறது. ‘திட்டும் சொல்' என்பதை கண்டறிந்ததும் ஏற்கனவே அத்தகைய சொல் சேமிக்கப்பட்டிருக்கும் உணர்வுகளை எடுத்து எதிர்வினையாக்கி அனுப்புகிறது. அந்த எதிர்வினை உணர்வு நம்முடைய கோபமாக இருக்கலாம். அமைதியாக இருக்கலாம். வெறியாகவும் இருக்கலாம்.
ஒவ்வொரு நொடியிலும் பல கோடி நியூரான்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக் கொண்டிருக்கும் காட்சியை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு நியூரானும் இன்னொரு நியூரானுடன் மோதுகையில் எண்ணம் என்கிற பொறி உண்டாகிறது. அந்த எண்ணத்தை இன்னொரு நியூரான் தாங்கிக் கொண்டு, தான் கொண்டு வந்த அனுபவத்துடன் சேர்த்துக் கொள்கிறது. இப்படி ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு எண்ணம் அல்லது உணர்வுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. பல எண்ணங்கள் பல உணர்வுகளுடன் சேருகின்றன. பல உணர்வுகள் பல அனுபவங்களுடன் சேருகின்றன. இந்த மொத்தமும் மூளையின் ஓர் அறைக்குள் குவிகின்றன. அந்த அறை ஒரு நம்பிக்கையாக மாறுகிறது.
இத்தனை நுணுக்கம் வாய்ந்த மூளையின் செயல்பாட்டுக்குள் சிறு அதிர்வு நேர்ந்தால் என்ன ஆகும்? ஒரு போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் குறுக்கே ஒரு மரம் விழுந்தால் என்ன ஆகும்?
உங்கள் நம்பிக்கைகள் பொய்க்கும். புது நம்பிக்கைகள் தோன்றும். பரிச்சயமற்ற உணர்வுகள் உருவாகும். முன்னுக்கு பின் முரணான எண்ணங்கள் தோன்றும். அவற்றை எதனுடன் தொடர்புபடுத்துவது என தெரியாமல் நியூரான்கள், சம்பந்தமற்ற நம்பிக்கைகளின் அறைகளுக்கு சென்று கதவுகளை தட்டும்.
திடீரென மூளைக்குள் தோன்றி மறையும் ஒரு கலவரத்தால் எல்லாமும் தலைகீழ் ஆகிறது. ஏன் அப்படியொரு கலவரம் என காரணம் கற்பிக்க, இருக்கும் நம்பிக்கைகளின் உதவியையே மூளை நாடும். அந்த நம்பிக்கை சமயங்களில் முற்பிறவியாக இருக்கிறது. வேறொரு உலகமாக இருக்கிறது. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தியாக இருக்கிறது. அல்லது தேஜா வூ என பெயரிடப்பட்டு நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் புதுவித நம்பிக்கையாக இருக்கிறது.
தேஜா வூ என்பது நாம் நினைத்துக் கொள்ளும் கற்பனைகளே என அறிவியல் கூறுகிறது. அந்த கற்பனையும் பிற கற்பனைகளை போலல்லாமல் சூட்சுமம் நிறைந்ததென சொல்கிறது. ஏனெனில் தேஜா வூ என்ற கற்பனை உண்மையாக நேர்வதாக நாம் நம்பிக் கொள்கிறோம் எனப் பரிசோதனையின் வழியாகவே அறிவியல் உறுதிப்படுத்திகிறது.
பிரிட்டன் நாட்டில் இருக்கும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் ஒரு பரிசோதனையை நடத்தியது. பரிசோதனைக்கு பல பேரை அழைத்திருந்தனர். ஒவ்வொருவரிடமும் பல வார்த்தைகளை குறிப்பிட்டு ஞாபகம் வைத்துக் கொள்ள கூறினர். கூறப்பட்ட வார்த்தைகள் எல்லாமும் ஏதோவொரு விஷயத்தை சம்பந்தப்படுத்தியதாக இருந்தன. ஆனால், அந்த விஷயத்தை குறிப்பிடும் வார்த்தை, சொல்லப்படும் வார்த்தைகளில் இருக்காது.
உதாரணமாக bed (படுக்கை), pillow (தலையணை), night (இரவு), dream (கனவு) என வார்த்தைகளை கொடுத்து நினைவில் வைத்துக் கொள்ளக் கூறினர். S என்கிற எழுத்தில் தொடங்கும் வார்த்தை ஏதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டதா எனக் கேட்கப்பட்டது. வந்திருந்தவர்கள் ‘இல்லை’ என்றனர். சற்று நேரம் கழித்து, சொல்லப்பட்ட வார்த்தைகளை திரும்பச் சொல்லுமாறு கேட்கப்பட்டது. பரிசோதனைக்கு வந்திருந்தவர்களும் கூறினர். சொல்லப்பட்ட வார்த்தைகளை சரியாகக் கூறினர். இப்போது இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. தூக்கம் என்ற அர்த்தம் தொனிக்கும் Sleep என்கிற வார்த்தை, சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருந்ததா என்ற கேள்வி.
மூளைக்குள் மின்மினிகள் பறந்தன. நியூரான்கள் பட்டாசு வெடித்தன. அனைவருக்கும் அதே போன்ற கேள்வி முன்பு கேட்கப்பட்டது போல் தோன்றியது. தேஜா வூ என சொல்லப்படுகிற அதே அனுபவம் நேர்ந்தது.
எப்படி தெரியுமா?
படுக்கை, தலையணை, இரவு, கனவு யாவும் தூக்கம் என்கிற விஷயத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். ஆனால் தூக்கம் என்ற வார்த்தையை குறிக்கும் Sleep என்ற வார்த்தை சொல்லவில்லை. நான்கு வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள சொல்லும்போதே நம் மூளை இயல்பாக அவற்றுடன் தொடர்புடைய ‘தூக்கம்’ என்கிற வார்த்தையை தேடி எடுத்திருக்கும். அதை உறுதிப்படுத்த, அதாவது குழப்பிவிட, இன்னொரு கேள்வியும் கேட்கப்படுகிறது. S என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை சொல்லப்பட்டதா என்ற கேள்வி. உடனே மூளை S எழுத்தில் தொடங்கும் வார்த்தை என்றால் Sleep என புரிந்து நினைவை உருவாக்கிக் கொள்கிறது. ஆனால் அந்த வார்த்தை சொல்லப்படாததால், இல்லை என பதில் சொல்கிறார்கள்.
சற்று நேரம் கழிந்த பிறகு, வார்த்தைகள் கேட்கப்படுகின்றன. படுக்கை, தலையணை, இரவு, கனவு என வரிசையாக சொல்கிறார்கள். இப்போது குழப்புவதற்கான கேள்வி கேட்கப்படுகிறது. Sleep என்கிற வார்த்தை சொல்லப்பட்டதா என்ற கேள்வி.
ஏற்கனவே தூக்கம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் சொல்லப்பட்டதால் தூக்கம் என்ற நினைவை மூளை எடுத்து வைத்திருக்கிறது. S என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை சொல்லப்பட்டதா என க்ளூ கொடுத்து தூக்கம் பற்றிய நினைவை மூளை உறுதிபடுத்தவும் செய்துவிட்டோம். இப்போது தூக்கம் என்கிற வார்த்தை முன்பு சொல்லப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டதும், மூளையில் தூண்டுதலே இல்லாமல் உருவாகி நிற்கும் Sleep பற்றிய நினைவு கடகடவென தந்தி அடித்து அனுப்பி, அவர்களை ஆம் என சொல்ல வைத்துவிடுகிறது. அவ்வளவுதான். மின்மினிகள் பறக்கின்றன. நியூரான்கள் புன்னகைக்கின்றன. அறிவியல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நம்பிக்கைகள் உருவாகின்றன.